Ads Area

சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மாணவி சாதனை.

 (ஏ.எம்.இன்சாப்)


ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகத்தின் ஏற்பாட்டில் 06-10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான "கல்வி கண் போன்றது" எனும் தலைப்பில் நடைபெற்ற சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மாணவி வெற்றியீட்டியுள்ளார். 


இந்தியா, மலேசியா ,கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து , கட்டார், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றிய இவ் உலகளாவிய பேச்சுப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு சர்வதேச  ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட தேசபந்து ஜலீல் மற்றும் எம்.ஆயிஷா ஆகியோரின் ஏக புதல்வியும் சம்மாந்துறை அல்- அர்சத் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை)  மாணவியுமான ஜலீல் பாத்திமா மின்ஹா.


இம் மாணவி இதற்கு முன்னர் தமிழ்நாட்டு இலக்கிய கழகம் வழங்கிய "இந்திய தேசத்தின் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுக் கண்ணி விருது", தமிழ் நாட்டு அரசின் "இளமாமணி காந்தி  விருது" மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய "சிறந்த மாணவர் விருது" போன்றவைகளையும் சுவீகரித்தவர் என்பதோடு அண்மைக்காலமாக இளம் இலக்கிய ஆர்வலராய் கவிதைகள் படைப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் "மின்மினியின் கீறல்கள்" எனும் கவிதை நூல் ஒன்றினை மிக விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


மாணவி பாத்திமா ஜலீல் மின்ஹாவைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29.08.2022) பாடசாலையில் பாடசாலை அதிபர் எம்.அப்துல் ரஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்மாணவி மற்றும் அவருக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்கள் உட்பட அவரது பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வின் போது  பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர்,  பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ஏ.எல்.எம். மஜீட், சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ. சபூர் தம்பி மற்றும் பிரதி அதிபர் (நிருவாகம்) எம். அபூபக்கர், பிரதி அதிபர் (கல்வி அபிவிருத்தி) எம்.ஏ.எம். சிராஜ், பகுதித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe