Ads Area

மட்டு.பள்ளிவாயல் வளாக மரத்தை வெட்டிய வழக்கு : மர அடியினை அகற்றப்போவதில்லை என உத்தரவாதம்.

 பாறுக் ஷிஹான்.


மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாமா பள்ளிவாயலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட  அடிப்படை உரிமை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில்  மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு வந்தது.


பிரதிவாதிகளான வீதிப்போக்குவரத்து அதிகார சபைக்காகத் தோன்றிய சிரேஷ்ட அரச சட்டத்தரணி பிரதிவாதிகளிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்கள் பெற வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டு ஆதரிப்பிற்கு வேறு ஒரு திகதியைக் கோரினர்.


இந்நிலையில் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் கிழக்கு மாகாண நிறைவேற்றுப் பொறியியலாளரால் 14.05.2024ம் திகதிய  பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறித்த மரம் அமைந்துள்ள வாகனத்தரப்பிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூச்சாடிகளையும் இதர மரங்களையும் 21.05.2024 (இன்று) திகதிக்கு முன்னர் அகற்றுமாறும் அவை அகற்றப்படாவிடின் National Thoroughfares சட்டத்தின் கீழ் தான் அகற்றப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தமை இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 


இடைக்காலத்தடை ஒன்று இல்லாவிட்டால் பிரதிவாதிகள் குறிப்பிட்ட இடத்தில் அத்துமீற வாய்ப்பிருக்கிறது எனத்தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய அரச சட்டத்தரணி அடுத்த திகதியில் வழக்கு விசாரணைக்கு வரும் வரைக்கும் பிரதிவாதிகள் இருப்பதை இருக்கின்றவாறே பேணுவதாக (Status Quo) நீதிமன்றிற்கு உத்தரவாதமொன்றை வழங்கியிருந்தனர். குறிப்பிட்ட உத்தரவாதமானது நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது.


அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனைக்காக நிர்ணயிக்கப்பட்டது.


உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதத்தினை மீறுவது நீதிமன்றினை அவமதிக்கும் (Contempt of Court) செயலாகும். 


இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி அன்ஞன, சட்டத்தரணி றாஸி முஹம்மத் ஆகியோரோடு அறிவுறுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.


Jami-Us-Salam-Jummah-Masjid-Batticaloa


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe