Ads Area

ஒலுவில் அஷ்ரப் நகரில் சடலத்தைக் கூட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்களது பிரச்சினைகளை ஆராய்கின்றது இச்செய்திப்பெட்டகம். 


அப்பகுதி மக்கள் வீதி மறியல் போராட்டம் முன்னெடுத்து தமது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுள்ளனர்.


குறிப்பாக, வீதி அபிவிருத்தித் திணைக்களம் உட்பட உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தமது பிரச்சினைகளை முன்வைத்தும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.


குறித்த அஷ்ரப் நகரப்பகுதி மக்களின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் உட்பட ஏனைய செயற்பாடுகளுக்காக கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


இவ்வருட முற்பகுதியில் இந்நகர்ப்பகுதியில் பெய்த அடைமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.


இவ்வெள்ளம் காரணமாக இப்பகுதி பிரதான வீதிகள் பாரிய சேதங்களுக்குள்ளாகியதுடன், ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கின்ற பிரதான பாலமொன்றும் பாரிய உடைப்பெடுத்துள்ளது.


இதனால் வழமை போன்று செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவையும் இடம்பெறவில்லை எனவும் இச்சேவை தடைப்பட்டுள்ளதனால் பாடசாலைக்கு தங்கள் பிள்ளைகள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டினையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.


சுமார் 125 குடும்பங்கள் வாழ்கின்ற இப்பகுதியில் வீடில்லாப்பிரச்சினை, பொது மையவாடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.


அத்துடன், குறித்த அஷ்ரப் நகரிலிருந்து பாலம் உடைவு காரணமாக ஒலுவில் பகுதியை நோக்கி அத்தியாவசியத் தேவைக்காக முச்சக்கரவண்டிக்கு 2,000 ரூபா செலுத்திச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.


இது தவிர, இப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்னர் 4 வயதுச்சிறுவன் ஒருவன் மரணமடைந்ததாகவும் குறித்த சடலத்தை ஒலுவில் நகரிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe