Ads Area

கல்முனை டமாஸ் ஜூவலரி சந்தியிருந்து கொமர்சியல் வங்கி வரையான ஒரு வழிப்பாதை இரு வழிப் பாதையாக மாற்றம்.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரப் பகுதிகள்  உட்பட ஏனைய இடங்களின் பொதுப்போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் பொதுப்போக்குவரத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று தனியார் விடுதியில் நடைபெற்றது.


குறித்த கலந்துரையாடலானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக நெறிப்படுத்தலில் ஆரம்பமானதுடன், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.


அத்துடன், கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை பகுதியில் ஒரு வழிப்பாதையாகக் காணப்பட்ட வீதியினை இரு வழிப்பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் ஏகமனதாக இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட துறைசார் அதிகாரிகளின் ஆலோசனையுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதற்கமைய இன்று (23) காலை முதல் குறித்த ஒரு வழிப்பாதை (டமாஸ் ஜூவலரி சந்தீருந்து கொமர்சியல் வங்கி வரையான ஒரு வழிப்பாதை) இரு வழியாக மாற்றப்பட்டு, பொதுப்போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. 


இரு வழியாக மாற்றப்படவுள்ள வீதியின் இரு மருங்கிலுமுள்ள சட்ட விரோத தரிப்பிடங்கள் உள்ளிட்ட ஏனைய விடங்களும் ஆராயப்பட்டன.


மேலும்  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேதமடைந்து காணப்படும் வீதிகள், உள்ளக வீதிகள், பாலங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக்கலந்துரையாடலில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன், விபத்துக்களைக் குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் வீதிப்போக்குவரத்து தடைகள் மற்றும் சட்டவிரோத வாகனத் தரிப்பிடங்கள் பாதசாரிகளுக்கு இடையூறாகவுள்ள இடங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அவற்றை அகற்றுவதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் சம்பந்தப்பட்ட துறைசார்  தரப்பினரை அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக்கொண்டார்.


இது தவிர, போக்குவரத்துத் துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பேரூந்து சாரதிகள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள், அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ளடங்குகின்ற பிரதான, உள்ளக வீதிகளின் திருத்த வேலைகள் தொடர்பிலும் விசேட கவனஞ்செலுத்தப்பட்டு விபத்துக்களைக் குறைப்பதற்கான செயற்பாடுகளும் அக்கலந்துரையாடலில ஆராயப்பட்டன.


மேலும், ஆண்டு தோறும் ஏற்படுகின்ற விபத்தின் தன்மைகள், உயிரிழப்புகள், காயமடைதல் தொடர்பிலும் ஆராயப்பட்டு சட்டவிரோதமாக பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்து உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் நபர்களை இனங்கண்டு  கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.


குறித்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, கல்முனை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழியங்கும் பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி தேசப்பிரிய பத்ரன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேகச் செயலாளர் நெளபர் ஏ.பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர்  எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச்சபை அதிகாரிகள், நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை உத்தியோகத்தர்கள்,  முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், அம்பாறை மாவட்டத்தின் பொலிஸ் நிலையப்பொலிஸ் உத்தியோகத்தரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe