Ads Area

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்கள் ஐவருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு.

 பாறுக் ஷிஹான்.


முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூறுமுகமாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் எனக் குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தற்போது மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்து சமூக சேவகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஐவருக்கு இவ்வாறு கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் குறித்த நபர்களுக்கு தடையுத்தரவு பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன், தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், விநாயகம் விமலநாதன்ஆகிய ஐவருக்கே இவ்வாறு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.


மேலும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரிய நீலாவணை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்  அப்பகுதியில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


அத்துடன், கல்முனை பாண்டிருப்புப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


சம்பவமானது காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.


கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.


பின்னர் பொலிஸாரின் நடவடிக்கையைத்தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட குழுவினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவிற்குச்சென்று தமக்கிழைக்கப்பட்ட அநீதி தொடார்பில் முறைப்படுகளைப்பதிவு   செய்திருந்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe