பாறுக் ஷிஹான்.
கட்டடமொன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டில் இளைஞனைத்தாக்கி காயப்படுத்திய நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரைக்கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கட்டடமொன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் மோதல் தொடர்பிலான குறித்த வழக்கு திங்கட்கிழமை (03) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம், வாதங்களின் அடிப்படையில் குறித்த இளைஞனைத்தாக்கி பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளருக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டு தற்போது வரை தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரைக்கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கினை எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆந்திகதி வரை நீதிவான் ஒத்தி வைத்தார்.
செய்திப்பின்னணி
நகைக்கடை உரிமையாளரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கைது செய்த பொலிஸார்-
கட்டடமொன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகியிருந்த நகைக்கடை வர்த்தகரை கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட கைகலப்பினால் இளைஞன் காயமடைந்த நிலையில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த இளைஞனைத்தாக்கிய சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி தானும் தாக்கப்பட்டதாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக விடுதி 7 இல் தங்கியிருந்த போது அங்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸார் சந்தேக நபரான நகைக்கடை வர்த்தகரைக் கைது செய்துள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் பொலிஸாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியினையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடமொன்றினை நிர்மாணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுவதாகக்குறிப்பிட்டு அருகிலுள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படமெடுத்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்கின்ற 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞனே நகைக்கடை உரிமையாளர் குழவினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்.
இதனையடுத்து, குறித்த தாக்குதலில் காயமடைந்த அவ்விளைஞன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் எனக்கூறப்படுபவரும் தானும் தாக்கப்பட்டதாகக்கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையின் 7வது விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவரின் நிலைமை பாரதூரமாக இல்லாத போதிலும் அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் உறவினரான வைத்தியர் கடந்தகால காய நிலைமையைக் காட்டி கல்முனை தலைமையக பொலிஸாரின் விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், மே மாதம் (31) மாலை இளைஞனைத் தாக்கிய நகைக்கடைக்காரரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன், நள்ளிரவில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனையும் அவ்விடத்திற்குச்சென்ற கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குத்ய்தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்முனை தலைமையக பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.