சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களினால் முறைப்பாடு ஒன்று நேற்று (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபர் என்பவரால் மன்றிக்கு செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இன்று (15) சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்க்குட்ப்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்ட சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்துவதனால் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்க்கு சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தல் மற்றும் சமாதானகுலைவு ஏற்ப்படக்கூடிய சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட கூடிய சாத்தியமுள்ளதாலும் இவ் நிகழ்வை நடாத்துவது உசிதமானது அல்ல என்பதனால் இந்த நிகழ்வினை நடத்தாமல் நிறுத்துமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் , வீரமுனை கோவில் செயலாளர் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் கோபுரம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கு அமைவாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று (15) குறித்த இடத்திற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் வருகை தந்திருந்தார் சம்மாந்துறை பொலிஸாரினால் நீதி மன்ற தடையுத்தரவு வாசிக்கப்பட்டது. இதன் போது இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைதியாக அவ்விடத்தை விட்டு சென்றார் இதே வேளை வீரமுனை பிரதேச மக்களினால் குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி கம்பி கூடுகள் நாட்டப்பட்டன.
இதனால் முஸ்லிம் தமிழ் இனத்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குறித்த இடத்திற்கு பொலிஸ் உயர் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம். சகீல், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அதாவுல்லா அவர்களின் சம்மாந்துறைக்கான இணைப்புச் செயலாளர் ஆக்கிப் அன்சார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் , சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர், கோவில் நிர்வாகத்தினர், கிராம சேவை உத்தியோகத்தர், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தவர்களும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் 2024.06.19ம் திகதி காலை 09.00 மணிக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
குறித்த கோபுரம் அமைப்பது சம்பந்தமாக இதற்கு முன்னரும் முயற்சி செய்து அது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டப்படி அனுமதி பெறப்படாமல், அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காமல் உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.