நூருல் ஹுதா உமர்.
யுத்த காலத்தில் காரைதீவின் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச்சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் சமூகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட மக்கள் மீது இனவாதமாக விரல் நீட்டுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோன்று, அவர்கள் இழந்து நிற்கும் உரிமைகள், கரங்கா காணிப்பிரச்சினை, பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த வேண்டிய தேவை, நிர்வாக அதிகாரிகளுக்கு முறையற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டு உடனடியாக அம்மக்களின் தேவைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.முஹம்மட் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தனது மண்ணின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி வந்த அம்பாரை மாவட்டத்தின் இதயமாக இருக்கும் சம்மாந்துறைத்தொகுதி இன்று தனது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் எல்லோரும் வந்து பந்தாடும் இடமாக சம்மாந்துறை மாறி வருவதை எண்ணி நாங்கள் வேதனையுடன் இருக்கிறோம்.
சம்மாந்துறை மக்களின் வாக்குகளைப்பெற்ற பாராளுமன்றப்பிரதிநிதி என்ற வகையில் அங்கு நடைபெறும் அநியாயங்களைச் சுட்டிக்காட்டி நீதி கோரி உரியவர்களிடம் நாங்கள் பேசியும் இந்த நிமிடம் வரை நியாயங்கள் கிடைக்கவில்லை.
அம்மக்களின் நிர்வாகப்பதவிகளில் நிறைய அநியாயங்கள் நடக்கிறது. நாட்டின் சட்டங்களை மீறி, உள்ளூராட்சி சட்டங்கள், நகரத்திட்டமிடல் சட்டங்கள் போன்ற பல சட்டங்களை மீறி எவ்வித முறையான அனுமதிகளுமின்றி சில நிர்மாணப்பணிகளைச் செய்கின்ற போது சட்டரீதியாகச் செய்யுமாறு பணித்தாலும் அவற்றையெல்லாம் கவனத்திற்கொள்ளாது சட்டத்தை மீறி நடக்கும் போது அதை இனவாதக்கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அது பற்றி பாராளுமன்ற அமர்விலும் பேசப்பட்டுள்ளது.
பல வரலாறுகளைக்கூறி சம்மாந்துறை மக்களை பிழையான கண்ணோட்டத்தில் இன்று காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அநீதிக்குள்ளான சம்மாந்துறை மக்களின் பாராளுமன்றப்பிரதிநிதி என்ற வகையில் இன்னும் அநீதிக்குள்ளாக்கும், இனவாதச்சாயம் பூசும் நடவடிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
1985ம் ஆண்டு காலப்பகுதியில் காரைதீவில் வன்முறை மூண்ட போது காரைதீவின் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச்சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் சமூகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
அம்மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டு உடனடியாக அம்மக்களின் தேவைகள் நிவர்த்திக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.