Ads Area

கல்முனை முஹைதீன் ஜும்ஆப்பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்பு : பதற்றத்தை தனிக்க களத்தில் பொலிஸார்.

 பாறுக் ஷிஹான்


கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலின் போது ஏற்பட்ட இழுபறி காரணமாக கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.


அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரத்தில் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல்களின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள், ஊழல் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப்பத்திரத்தை கடந்த 2024.07.24ம் திகதியன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.


இதற்கமைய புதிய நம்பிக்கையாளர் சபை குழுவினர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பொருட்டு ஊடக சந்திப்பினூடாக பொதுமக்களுக்கு இன்று அறிவித்ததுடன், குறித்த பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு பொதுமக்களைச் சந்தித்து தொழுகை மேற்கொண்டு புதிய நம்பிக்கையாளர் நியமனம் தொடர்பில் தெளிவாக விளக்கங்களை வழங்கி வைத்தனர்.


அத்துடன், பள்ளிவால் அலுவலகத்தில் சென்று புதிய நம்பிக்கையாளர் சபை நிர்வாகம் தமது கடமைகளை ஆரம்பித்த வேளை, முன்னாள் நம்பிக்கையாளர் சபை நிர்வாகத்தலைவர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக பள்ளிவாசல் கடமைகளை சிறு குழுவொன்று வருகை தந்து குழப்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.


இதற்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் புதிய நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் இதர தரப்பினருடன் தொடர்பினை மேற்கொண்டு நல்லிணக்கத்தை மேற்கொண்டிருந்ததுடன், ஏற்படவிருந்த பதற்ற நிலைமைகளை சீர்செய்து சென்றதைக் காண முடிந்தது.


மேலும், மேற்குறித்த இரு பள்ளிவாசல்களுக்குமான புதிய நம்பிக்கையாளர் சபையினரின் ஆட்சிக்காலம் 03 வருடங்கள் என்பதுடன், 22.05.2024 முதல் 21.05.2027 வரை இருக்கும் என முஸ்லீம் பள்ளிவாசல்கள் மற்றும் தரும நம்பிக்கை சொத்துப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.ரிப்ழான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe