Ads Area

பாராளுமன்றத்தில் பிஸ்மில்லாஹ் சொல்ல யாருக்கும் தைரியமிருக்கவில்லை - ஹரீஸ் எம்பி.

 நூருல் ஹுதா உமர்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்தையும் நமது மதத்தையும் நமக்கு வருகின்ற பிரச்சினைகளையும் பாதுகாப்பதற்காக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரமாயிரம் போராளிகள் ஒன்றுகூடி அந்த இயக்கத்தை ஆரம்பித்தோம். 


அன்று முஸ்லிம்களின் கலிமா, முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை. பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தை பாராளுமன்றத்தில் ஒலித்தது மர்ஹும் அஷ்ரப் என்பவரின் வாயில் தான். அதற்கு முன்பு பிஸ்மில்லாஹ் சொல்வதற்கு யாருக்கும் தைரியமிருக்கவில்லை. 


தொப்பி அணிவதற்கு பாராளுமன்றத்தில் தைரியம் இருக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்கு யாருக்கும் தைரியமிருக்கவில்லை. அன்று அந்த தைரியத்தை கையிலெடுத்து, இந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்திற்கு அன்று குரல் கொடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது ஜனநாயக இயக்கம் மட்டுமே என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் தெரிவித்தார். 


வரிப்பத்தான்சேனை பொது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்து உரையாற்றிய அவர், 


காத்தான்குடி, ஏறாவூரில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது தன்னந்தனியாக நின்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அம்மக்களுக்கு பாதுகாப்பு முகாம்களை திறந்து கொடுத்தவர் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மட்டுமே. அவர் உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்தவரல்ல. 


நீங்கள் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரபை கண்டிருப்பீர்கள். அவர் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இம்மண்ணில் ஒரு அபிவிருத்தியை ஏற்படுத்தி ஒரு புரட்சி செய்தார். 


அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு பிரதேசங்களில் அபிவிருத்தியைக் கொண்டு வந்த ஒரு மகான் இருக்கிறார் என்றால் அது நமது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மட்டுமே. அவ்வாறானதொரு தலைமையின் பாசறையில் வளர்ந்தவன் நான். ஒரு பதவியில் அமர்ந்து புகழைச்சேர்க்க வேண்டும். இப்பதவியிலிருந்து பணத்தைச்சேர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.


அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களுக்குச் சென்று எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். 


உங்கள் வாங்காமம் பிரதேசத்தில் பாடசாலைக்குத் தேவையான 5 மில்லியனுக்கு அதிகமான நிதியைக் கொடுத்திருந்தோம். இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கட்டுமானப்பணிகளுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் நிதியைக்கொடுத்திருந்தோம். 


அதேபோன்று, தாய்0பள்ளியான, தலைமைப்பீடமான வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஐந்து மில்லியன் நிதியொதுக்கப்பட்டுள்ளது. 


வரிப்பத்தான்சேனை பிரதான மைதானமாக, ஒரு அடையாளமாக இருக்கின்ற மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக ஐந்து மில்லியன் ரூபாய் ஒதுக்கி இருக்கின்றோம். இம்மண்ணில் ஒன்றரை மாத காலத்தில் வீதிகள், மைதானம், பள்ளிவாசல்கள், சமூக சேவை நிறுவனங்கள் என்று பெருமளவான நிதியைக் கொடுத்து இம்மண்ணை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கில் எமது கடமையாக இதை செய்ய இறங்கி இருக்கின்றோம்.


தாய்மார்களே, இதை ஏன் நான் சொல்கின்றேன் என்றால், இன்று என்ன நடக்கின்றது இந்த நாட்டில். நாங்கள் கடந்த ஆட்சியின் போது கோத்தாபாய என்ற கொடுங்கோலன் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயம் கருவறுக்கப்பட்ட போது நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்கவில்லை. 


அதற்கெதிராக கடுமையாகப் போராடியிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் எங்களை நாங்களே பலி கொடுத்து, தலையை அடமானம் வைத்துப் போராடியுள்ளோம் என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe