பாறுக் ஷிஹான்.
திருட்டுச்சம்பங்களில் நீண்டகாலமாக ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர்ப் பகுதிகளிலுள்ள 4 வீடுகள் ஒரே நாளில் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை (20) அன்று பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த முறைப்பாட்டிற்கமைய பெரிய நீலாவணை பொலிஸார் உடனடியாக புலன்விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், திருட்டு இடம்பெற்ற பகுதிகளிலுள்ள சிசிடிவி கமராக்களின் செயற்பாட்டினையும் கண்காணித்திருந்தனர்.
இதற்கமைய குறித்த திருடப்பட்ட வீடுகளில் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை திருடர்கள் கைவரிசைகளைக் காட்டியிருந்ததை அவதானித்தனர்.
விசாரணைகளைத் துரிதப்படுத்தி இருந்த பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு வீட்டில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக பொலிஸாரின் ஒற்றர் மூலம் தொலைபேசி வாயிலான தகவலொன்று இரவு கிடைக்கப்பெறுகின்றது.
இதன் போது துரித கதியில் செயற்பட்ட பொலிஸ் குழு திருடர்கள் பதுங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்டு அங்கிருந்த 2 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
இதன் போது கடந்த காலங்களில் வீடுகள் உடைத்து திருடப்பட்ட பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் சில போதைப்பொருட்கள் என்பன சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டன.
அத்துடன், கைதான மருதமுனை நூராணியா வீதியைச் சேர்ந்த அப்துல் காதர் முகைதீன் முஹமட் ரொகான் (வயது 30) மற்றும் மருதமுனை சம்சம் வீதியைச் சேர்ந்த முகமட் மஜினூன் முகமட் கிகான் (வயது 32) இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பெரி யநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (21) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இரு சந்தேக நபர்களைதும் எதிர்வரும் 25 ஆந்திகதி வரை 5 நாட்கள் தடுப்புகாலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் திருடப்பட்ட தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி உருக்கிய கல்முனை நகைக்கடை உரிமையாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களை சட்ட நடவடிக்கைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.