இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் பற்றிய செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கடந்த மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிவரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து இத்தாலியில் உல்லாசப் படகு சவாரி என கேளிக்கைகள் தொடர்ந்தன. இந்த திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் மும்பையில் இன்றுடன் முடிகிறது. நாளை பாந்த்ரா- குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
உலகளவில் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ள இந்த பிரமாண்டமான திருமணத்துக்காக இந்தியர்கள் உண்மையில் செலவு செய்யும் அளவுக்கு ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி செலவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அம்பானி குடும்பத்தார் உண்மையில் தங்களது சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் தான் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்காக செலவு செய்கிறது என்று தேசிய பைனான்சியல் அட்வைஸரி சர்வீஸஸ் தலைவர் நிதின் சௌத்ரி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சொத்து வைத்துள்ள ஒரு இந்தியர் தங்களது பிள்ளைகளின் திருமணத்துக்காக சர்வசாதாரணமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவு செய்வார்கள். ரூ.10 கோடி சொத்து வைத்திருப்பவர்கள்கூட ரூ.1.5 கோடி செலவு செய்வார்கள். இது இந்தியர்கள் சாதாரணமாக தங்களது இல்லத் திருமணத்து்க்காக செலவிடும் 5 முதல் 15 சதவீதம் வரை இருக்கும்.