Ads Area

ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து.. கப்பலில் பணியாற்றிய 13 இந்தியர்களை காணவில்லை!

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்துள்ளது. அந்த கப்பலில் பணியாற்றிய 16 பேர் மாயமாகி உள்ள நிலையில், அதில் 13 பேர் இந்தியர்கள் என்றும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஓமன் நாட்டின் கடல் பகுதியில், கொமரோஸ் நாட்டுக் கொடி கொண்ட எண்ணெய்க் கப்பல் கவிழ்ந்துள்ளது. அந்த கப்பலில் பணிபுரிந்த 16 பேரை காணவில்லை என்று, மூழ்கியதாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஓமன் கடல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.


பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடலில் எண்ணெய் கசிவு குறித்த எந்த தகவலும் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. ப்ரெஸ்டீஜ் பால்கன் என்பது 2007 இல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் கப்பல். இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய கடலோரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கப்பல் இணையதளத்தின் தகவல்படி, அந்த கப்பல் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஏமன் துறைமுக நகரமான ஏடனை நோக்கி சென்று கொண்டிருந்தது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe