கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சம்மாந்துறை செந்நெல் கிராமம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் கடந்த திங்கட்கிழமை (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்.
செந்நெல் கிராமம் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் Eng.என்.சிவலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் இதன்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.