பாறுக் ஷிஹான்.
நீண்டகாலமாக தமிழ், முஸ்லீம் மக்களிடையே சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக்கோபுரம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்று வந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காக வரவேற்புக்கோபுரம் அமைக்கப்படும் பகுதிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு குறித்த வரவேற்புக்கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கும் வீரமுனை கோவிலுக்குமுள்ள தூரத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக்கோபுரம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டினால் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் குறித்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை (30) பார்வையிட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வருகை தந்ததுடன், குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் காரியாலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலானது மூடிய அறையினுள் நடைபெற்றதுடன், ஊடகங்களுக்கு செய்திகளைச் சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கிராமிய வீடமைப்பு, கிராமிய மின்சாரம், கட்டிட நிர்மாண அமைச்சுக்களின் செயலாளர் எம்.கோபால இரத்தினம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபைச்செயலாளர் எம்.முகம்மட், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத்தவிசாளர் எம்.ஐ.எம் றனுஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சகில், ஐக்கிய தேசியக்கட்சி சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளர் வாஸித், சம்மாந்துறை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வீரமுனை கோவில் உறுப்பினர்கள், பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் எனப்பலரும் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,
சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக்கோபுரம் அமைப்பதில் முஸ்லிம், தமிழ் உறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, கலையரசன், பள்ளிவாசல் தலைவர், கோவில் தலைவர், பிரதேச சபைச் செயலாளர், பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்களத்தலைவர், வீதி அபிவிருத்தி அதிகார சபைத்தவிசாளர் போன்றவர்களிடம் இதற்குப் பொறுப்பான திணைக்களத்தின் வரைவு படங்களையும் மற்றும் வளைவுக்கோபுரம் அமைக்கு பகுதியில் காணப்படும் முஸ்லிம், தமிழ் மக்களின் குடும்ப எண்ணிக்கை விபரங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்குமாறும் இதற்கான தீர்வை ஒரு மாதம் பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தருவதாகவும் குறிப்பிட்டார்.