உருமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாறை மாவட்டத்திலும் தேசிய ரீதியிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக, அதனை கெளரவிக்கும் முகமாக சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 04 கணனிகள் மற்றும் 02 போட்டோ பிரதி உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (23) பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஜனதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய ரீதியாக சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இக் கணனி அன்பளிப்பு இடம்பெற்றது. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாறை மாவட்டத்தில் முதற்தரமாக செயற்பட்டமைக்காக இக் கெளரவிப்பு வழங்கப்பட்டது.
உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மற்றும் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கணனி உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அத்தோடு இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கடந்த வருட (2023)பிற்பகுதில் யானை மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 80 பயனாளிகளுக்கு சுமார் 6 மில்லியன் நட்டஈட்டு கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் அரசாங்க அதிபரும்,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவருமான ஐ.எம் ஹனீபா அவர்களும் ,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணி) எப்.நபீரா, காணி உத்தியோகத்தர்கள், தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீன்,கிராம சேவகர்கள்,காரியாலய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.