Ads Area

பாம்பு கடித்தால் என்ன செய்யலாம்! என்ன செய்ய கூடாது? சினிமாவை பார்த்து இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.

நமது நாட்டில் பாம்புக் கடி சம்பவங்களால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். பாம்பு கடித்தவுடன் முதலில் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.. அதுவே உங்கள் உயிரைக் காப்பாற்ற உதவும்.. எனவே, பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.


பாம்புக் கடி சம்பவங்களால் ஒவ்வொரு ஆண்டும் நாம் பல ஆயிரம் பேரை இழக்கிறோம். பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது என்பது பலருக்கும் தெரியாததே இதற்குக் காரணமாகும்.


சரி பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.


பதறாதீர்கள்: 


பாம்பு கடித்தால் முதலில் பதறாதீர்கள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.. அப்போது அது கடித்தால் பதறாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். ஆனால், உண்மையில் நீங்கள் பதறினால் தான் பாம்பின் விஷம் வேகமாக ரத்த ஓட்டத்தில் கலக்கும்.. எனவே முடிந்த வரை பதறாமல் இருங்கள். மேலும், வேகமாக நடப்பது, ஓடுவதும் விஷம் பரவுவதை வேகமாக்கும். எனவே, அதையும் செய்யாதீர்கள்.


அடுத்து மிக முக்கியமான விஷயம்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆம்புலன்ஸுக்கு கால் செய்யுங்கள்.. அல்லது மருத்துவமனைக்குச் செல்லுங்கள். தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கு விஷமுறிவு மருந்து இருக்கிறது. எனவே, பாம்பு கடித்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்வது தான். அதற்குப் பதில் வீட்டு மருத்துவம் அது, இது எனச் செய்தால் அது உயிருக்கு ஆபத்தையே தரும்.


கட்டக்கூடாது: 


மேலும், பாம்பு கடித்த இடத்தை சுற்றி இறுக்கமாகத் துணி அல்லது ஒயரை கொண்டு கட்ட கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோல கட்டுவது ரத்த ஓட்டத்தை மெதுவாக்கி பாம்பின் விஷம் உடலில் கலப்பதை மெதுவாக்கும் என்றே நம்பப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில் தான் இதுபோல கட்டுவது எந்தவொரு பலனையும் தருவதில்லை என்பது தெரிய வந்தது. சொல்லப்போனால் இதுபோல கட்டினால் அது பிரச்சினைகளை மோசமாக்கவே செய்யும். அதேபோல இறுக்கமான ஆடைகள் அல்லது நகைகளை அணிந்திருந்தால் அதையும் மாற்றிவிடலாம். போட்டோ முக்கியம்: முடிந்தால் உங்களை எந்த பாம்பு கடித்ததோ அதை ஃபோட்டாவாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பல வகை பாம்புகள் இருந்தாலும் சில வகையான பாம்புகள் மட்டுமே விஷம் கொண்டதாக இருக்கும். எனவே மருத்துவமனைக்கு செல்லும் போது உங்களை விஷ பாம்பு கடித்ததா அல்லரு விஷம் இல்லாத பாம்பு கடித்ததா என்பதை மருத்துவர்கள் கண்டறிய இது பெரியளவில் உதவியாக இருக்கும். மேலும், பாம்பு கடித்த இடத்தை இதய மட்டத்திற்கு கீழே வைக்க வேண்டும். இது விஷம் பரவுவதை மெதுவாக்கும்.. இது பொருத்தமான சிகிச்சையை வழங்க மருத்துவர்களுக்கு கூடுதல் நேரத்தை வழங்கும்.


இதை மட்டும் செய்யாதீர்கள்: 


அதேபோல பாம்பு கடித்தால் அந்த இடத்தை கத்தியை கொண்டு கட் செய்து, வாயை வைத்து சிலர் உறிஞ்சி எடுப்பார்கள். பெரும்பாலான படங்களில் இதை தான் காட்டுவார்கள். ஆனால், தப்பி தவறியும் இதுபோல எதையும் செய்துவிடாதீர்கள்.. இது நிலைமை மிக மோசமாகவே மாற்றும். மேலும், இது சுத்தமாக பயன் தராது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு துளி பெயிண்டை தண்ணீரில் கலக்கிவிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.. பிறகு அந்த ஒரு துளியை மட்டும் உங்களால் பிரித்து எடுக்க முடியுமா.. முடியாது.. அதுபோல தான் ரத்தம் உடலில் கலந்துவிட்டது என்றால் அதை மீண்டும் உறிஞ்சி எல்லாம் எடுக்க முடியாது.


எனவே, உங்களுக்கு இருக்கும் ஆப்ஷன் பதறாமல் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.. அதுவே உங்கள் உயிரை காக்க உதவும் என்பதை மறக்காதீர்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe