Ads Area

இலங்கையில் 5,000 முதல் 6,000 யானைகள் : 13 ஆண்டுகளுக்குப்பின் கணக்கெடுப்பு.

 பாறுக் ஷிஹான்.


கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் யானைகள் கணக்கெடுப்பை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நடாத்தி இருந்தது. குறித்த கணக்கெடுப்பானது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு   நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


இறுதியாக, நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்நாட்டின் காடுகளில் 5,000 முதல் 6,000 யானைகள் இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


பொதுவாக இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


அதன் பினந்த், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் யானைகள் கணக்கெடுப்பை 2021இல் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும், கோவிட் தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


நாடளாவிய ரீதியில் 3,130 நிலையங்களில் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டில் வாழும் யானைகளின் முழுமையான எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ளக்கூடிய வகையில் நாடளாவிய ரீதியில் தரவுகள், தகவல்களைப் புதுப்பிக்க 2011ம் ஆண்டின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


இதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


யானைகளுக்கான புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குதல், தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துதல், யானை, மனித மோதலைத்தடுப்பதற்கான மூலோபாயத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல், வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கிடையே சமநிலையை ஏற்படுத்துதல் ஆகியவை இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கங்களாகும்.


ஆசியாவில் யானைகள் வாழும் குறிப்பிட்ட சில நாடுகளில் ஒன்றாகவுள்ள இலங்கையில் யானைகளின் பாதுகாப்பு தேசியக்கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சர்வதேச பாதுகாப்பு முயற்சிகளுக்கமைவாக அதனை நாட்டின் பொறுப்பாக உருவாக்கியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe