Ads Area

மௌலானாவை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்க இடைக்காலத் தடையுத்தரவு.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இன்று (28) தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முறைப்பாட்டாளர் அலி சாகிர் மௌலானா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் சந்தக ஜயசுந்தர முன்வைத்த வாதத்தை பரிசீலித்த மாவட்ட நீதிபதி இத்தடையுத்தரவை எதிர்வரும் 11ம் திகதி வரை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


ஆதரவாளர்களதும் பொது மக்களதும் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் நாட்டின் எதிர்காலம் கருதி தாம் இம்முடிவை எடுத்ததாகவும் அறிவித்திருந்தார்.


ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக முன்னரே அறிவித்திருந்த நிலையில், கட்சியின் முடிவை மீறியதாகத் தெரிவித்து அலி சாஹிர் மௌலானாவுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.


இந்நிலையில், இது தொடர்பில் விளக்கம் கொடுக்க அலி சாஹிர் மௌலானாவுக்கு 01 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கடிதம் கடந்த 21ம் திகதி பதிவுத்தபால் மூலம் மௌலானா தரப்புக்கு கிடைத்துள்ளது.


அந்த ஒரு வார காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், இன்றைய தினமே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மருதமுனை பிரதேசத்தில் ஒன்றுகூடி அலி சாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்க நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், கூட்டம் கூடும் முன்பே நீக்கும் தீர்மானத்தை எடுக்க தலைவர், செயலாளர், அடங்கலான உயர்பீட உறுப்பினர்களுக்கு இடைக்காலத்தடையுத்தரவை மாவட்ட நீதி மன்றம் விதித்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe