இயற்கையின் கோரத்தாண்டவத்தால் உருக்குலைந்து போய் கிடக்கும் வயநாட்டில், மண்ணுக்குள் புதைந்த உயிர்களை மீட்கும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் அரசோடு கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
தன் உயிரையும் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அவர்கள் அனைவருமே நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். அவர்களில் சிலரது முகம் மட்டும் வீடியோக்கள் மூலம் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டு வருகிறது. அப்படித் தற்போது வீடியோ மூலம் கவனம் ஈர்த்திருப்பவர்தான் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா.
வெள்ளம் சீறிப் பாய்ந்து வரும் ஆற்றில், தன் உயிரையும் பொருட்படுத்தாது, தான் ஆற்றில் விழுந்தாலும் பரவாயில்லை, தன் கையில் உள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டி விழுந்துவிடக் கூடாது என கவனமாக, ஜிப்லைன் மூலம் சென்று, 35 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார் சபீனா.
வயநாடு துயரம் கேரள மாநிலத்தில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் கொட்டித் தீர்த்தது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று பெரிய நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகும் யாரையேனும் உயிருடன் மீட்க முடிகிறதா என்ற தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
சபீனாவின் துணிச்சல் இந்நிலையில், சூரல்மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், எதிர் திசையில் உள்ள நிலப்பகுதியில் சுமார் 35 மக்கள் காயங்களோடு சிக்கிக் கொண்டனர். இதனால் வெள்ளத்தைக் கடந்து சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே, தேசிய பேரிடர் மீட்பு குழு ஆற்றினை கடக்க ஜிப்லைன் அமைத்து எதிர் திசைக்கு சென்றனர். ஆனாலும் அங்கு சிக்கியிருந்தவர்களை அப்படியே இக்கரைக்கு அழைத்து வர இயலவில்லை. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டது. எனவே, இங்கிருந்து அக்கரைக்கு ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்களை மீட்புக்குழுவினர் தேடினர். ஆனால், அப்போதைக்கு அங்கு ஆண் செவிலியர்கள் யாரும் இல்லை. அதனால் கூடலூரை சேர்ந்த பெண் செவிலியர் சபீனா, தானே ஜிப்லைனில் அக்கரைக்குச் செல்வதாக மீட்புக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
வைரல் வீடியோ எப்படி ஒரு பெண் செவிலியரை ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு அனுப்புவது என முதலில் மீட்புக்குழுவினர் தயங்கியுள்ளனர். ஆனால், சபீனாவின் துணிச்சல் மற்றும் தைரியமான பேச்சால் நம்பிக்கை ஏற்பட்டு அவரை கயிறு மூலம் அக்கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மழையில் நனைந்து விடாதபடி ரெயின்கோட் அணிவிக்கப்பட்டு, கையில் மருத்துவப் பெட்டியைப் பிடித்துக் கொண்டு, காலுக்கடியில் சீறிப் பாய்ந்து வரும் வெள்ளத்தைப் பொருட்படுத்தாது, சபீனா ஜிப்லைனில் செல்லும் காட்சிகள் வீடியோவாக சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், தனது மெய்சிலிர்க்கும் இந்த அனுபவத்தை ஊடகங்களுக்கு பேட்டியாக பகிர்ந்துள்ளார் சபீனா. அதில் அவர்,