(சர்ஜுன் லாபீர்).
கல்வி என்பது வறுமை என்கின்ற இருளை அகற்றுகின்ற ஒளியாகும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் க.பொ.த(உ/த) எழுதிய மாணவர்களுக்கான 03 மாத கால விஸ்டா(Vista) தொழில் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
இன்று நாம் வறுமை என்று பேசிக் கொள்கின்றோம் அதன் மூலமாகத்தான் பொருளாதார சிக்கல்கள் சமூகத்திலே எழுகின்றன. சில பிறழ்வான நடத்தைகள் மேலோங்குகின்றன.குற்றத்தை செய்கின்ற மனப்பாங்கு அதிகரிக்கின்றது.சட்டங்களுக்கு கட்டுப்படாத சமூகம் என்றெல்லாம் நாங்கள் வறுமைய காரணமாக காட்டி அதன் விளைவுகளாக பேசிக்கொள்கின்றோம்..
எனவே நாம் வறுமையில் இருந்து மீள்வதாக இருந்தால் அதற்கான ஒரேயொரு வழி கல்வியை மட்டும் குறிப்பிட முடியும். கல்வி மேம்பாட்டின் மூலமாக வறுமையை நிரந்தரமாக நீக்க முடியும்.
வேறு செயற்பாடுகளும், அபிவிருத்திகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தாக்கு பிடிக்குமே ஒழிய கல்வியை போன்று நீடித்து நிலைத்து நிற்க முடியாது.
கல்வி என்பது நாம் எல்லோரும் குறிப்பிடுவது போல வறுமை என்கின்ற இருளை அகற்றுகின்ற ஒளி ஆகும். சூரியன் உதிக்கின்ற போது எவ்வாறு இருள் மெல்லமெல்ல விலகுகின்றதோ அது போல கல்வி மேம்படுகின்ற போது குறித்த சமூகத்தில், பிராந்தியத்தில், நாட்டில் இருந்து வறுமையானது ஒழிந்து போகும்.
எமது பிரதேசம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதனால் நமது பெற்றோர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற் கொண்டதனால் ஏற்படுகின்ற கஸ்டங்களை நாம் அனுபவித்து இருக்கின்றோம்.
எனவே நமது தொழில் முயற்சிகள் அனைத்தையும் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல ஸ்மார்டாக மாற்றம் செய்ய வேண்டும்.
எமது பிராந்தியத்தில் எதிர்காலத்தில் நிலவளமோ, நீர்வளமோ அதிகரிக்க போவதில்லை. வளங்கள் குறைந்து கொண்டு சொல்லும்.
ஆனால் எமது நாடு பொருளாதார ரீதியாக பல்வேறுபட்ட சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அரசாங்கம் கல்விச் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் நுட்பமாக கையாளுகின்றது.
எமக்கு கிடைக்கின்ற வளங்களை வைத்து உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி அபிவிருத்தியை அடைய வேண்டும் வேண்டும்.
மாணவ பருவத்தை வீணடிக்காமல் முறையான வழிகாட்டல்களோடு பயனிக்கின்ற போது எதிர்காலத்தை வெற்றிகரமாக அனுபவிக்க முடியும். அதுபோல் எமது குடும்பங்களில் இருக்கின்ற வறுமையை நீக்க முடியும். எமது பிராந்தியத்திலே தேவைப்படுகின்ற தலைமைத்துவத்தையும், ஆளுமைகளையும் வழங்க முடியும் மற்றும் எங்களது எதிர்கால சந்ததிகளை ஆளுமையுள்ள சந்ததிகளாக வளர்த்தெடுக்க முடியும் என்ற விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.