பாறுக் ஷிஹான்.
வயல் வேலைக்குச்சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமைவட்டை வயல் பிரதேசத்தில் கடந்த புதக்கிழமை (28) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றிருந்ததுடன், பாதையூடாகப் பயணித்த நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் நிந்தவூர் -02 இரண்டாம் குறுக்குத்தெருவைச்சேர்ந்த திருமணமாகாத 62 வயது மதிக்கத்தக்க மீரா லெப்பை முகம்மது முஸ்தபா உயிரிழந்தவராவார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை (20) மாலை மண்ணகழ்வு வேலைக்குச் சென்ற நிலையில், யானையினால் தாக்கப்பட்டு நிந்தவூர் 21ம் பிரிவைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.