ஜனாதிபதித் தேர்தலும் தொடரும் பாராளுமன்றத் தேர்தலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை! (1)
தேசத்தை அளிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க எமது அரசியல் கலாசாரத்தில், அரச யந்திர நிர்வாக கட்டமைப்புகளில் பாரிய முறைமை மாற்றங்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
சுதந்திர இலங்கை வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பிரதான கட்சிகள் தலைவர்கள் நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைவரை கொண்டு வந்திருக்கிறார்கள்.
எமது பார்வைகள் குறுகியவை ஆகையால் வரலாற்றை நாங்கள் திரும்பிப் பார்ப்பதுமில்லை, எதிர்காலத்தை தூர நோக்குடன் பார்ப்பதுமில்லை.
நேற்றுவரை பசியிலிருந்த எமக்கு இன்று கிடைக்கும் ஐந்து கிலோ அரிசியிற்கும் பருப்பிற்கும் அடுத்த ஐந்து வருடங்கள் நாட்டை பகற்கொள்ளைக் காரர்களிடம் பாரப்படுத்தும் வங்குரோத்து அரசியலை செய்து பழக்கப்பட்டு விட்டோம்.
இந்த நாட்டில் அரசியல் நோக்கங்களுக்காக இன மத மொழி வேற்றுமைகளை தூண்டிவிட்டு இனப்பிரச்சினையை வன்முறைகளுக்கும் ஈற்றில் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கும் இட்டுச் சென்றவர்கள் மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள் தான்.
மேற்படி யுத்தத்திற்காக சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் வீணாக விரயம் செய்திருக்கிறோம், பிராந்திய சர்வதேச சக்திகளிடம் நாட்டை நாட்டின் வளங்களை பணயமாக தாரை வார்த்திருக்கிறோம்.
இன்று எமது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சுமார் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் எமது உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்கள் அதனை விட அதாவது 120% விகிதமளவில் அதிகமாக இருக்கிறது, ஒவ்வொரு பிரஜையும் சுமார் 15 இலட்சம் தலைவீத கடனில் இருக்கிறோம்.
எமது வெளிநாட்டுக் கடன் மாத்திரம் சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது, அவற்றை வருடா வருடம் வட்டியும் முதலுமாக மீளச் செலுத்த எமக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன.
இயற்கை மற்றும் மனித வளங்கள் நிறைந்த இந்த விவசாய நாட்டில் விவசாயம் அரிசி, சீனி, மாவு, பருப்பு, கிழங்கு, வெங்காயம், பூண்டு, பால்மா, முட்டை என அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது, உள்நாட்டு உற்பத்திகளது விலைகளும் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உயர்ந்திருக்கிறது.
இந்து மகா சமுத்திரத்தின் முத்தாக நான்கு பக்கமும் 21500 சதுர கிமீ கடல் பரப்பையும் 1340 கி.மீ கடற்கரையையும் கொண்ட எமது நாட்டின் தேவைகளுக்காக மீன் மற்றும் கடலுணவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
விவசாயம், மீன்பிடி, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளை நவீனமயப்படுத்தி விருத்தி செய்து உள்நாட்டு நுகர்வில் தன்னிறைவு அடைந்து ஏற்றுமதி வருவாயை ஈட்டமுடியுமான ஒரு அழகிய தேசம் அளிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல், அரச நிர்வாக யந்திரம் மாத்திரமன்றி இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தக வியாபார மாஃபியாவும் இந்த அவல நிலைக்கு காரணமாகும்.
மனித வள அபிவிருத்தியை பொறுத்த வரையில் வருடாந்தம் 500,000 மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்திற்கு தோற்றினாலும் 35000 பேர்களுக்கு மாத்திரமே பல்கலைக் கழகங்களில் இடம் இருக்கின்றது, ஏனைய தொழில், தொழில் நுட்ப, தகவல் தொழில் நுட்ப கற்கைகளுக்கான வாய்ப்புக்களும் இன்னும் சில ஆயிரம் பேர்களுக்கு மாத்திரமே உள்ளன.
வருடாந்தம் நிபுனத்துவமற்ற பணியாட்களாக பணிப் பெண்களாக சுமார் மூன்று இலட்சம் பேர் கடல்கடந்து செல்லும் நிலை, ஆனால் அவர்கள் வைப்பதிலும் சுமார் 6 பில்லியன் வெளிநாட்டு செலாவணி இன்றேல் அரச யந்திரமே முடங்கும் நிலை ஏற்படுகிறது.
உள்நாட்டு வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கு தேவையான மனிதவள விருத்திபற்றிய அறிவும் ஆற்றலும் நிபுணத்துவமும் இல்லாத அடிப்படை சாதாரண பொதுத் தராதரங்கள் சித்தியடையாத மக்கள் பிரதிநிதிகளை நாம் ஏட்டிக்குப் போட்டியாக தேர்தல்களில் தெரிவு செய்து கொண்டு தி(கொ)ண்டாடுகிறோம்!
இந்நிலையில் பிச்சைக்காரன் கால் புண் போல் நாட்டை வைத்திருக்க இன மத வெறி அரசியல் மூலோபாபயங்களில் மூதலீடுகள் செய்யப்படுவது பகிரங்க இரகசியமாகும், போலி தேசப்பற்று சமயப்பற்று ஹீரோக்கள், பாதாள உலக அடியாட்கள் கூலிப்படைகள, களமிறக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்க்கப் படுகின்றன.
தொடரும்..
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்.