பாறுக் ஷிஹான்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு நேற்று சனிக்கிழமை (3) காலை முதல் மாலை வரை காரைதீவு கலாசார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளரும் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான யோகராஜா சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வாகன ஊர்வலம் நடைபெற்று தேசிய, மாகாண, கட்சிக்கொடிகள் அதிதிகளால் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரக்காந்தன் (பிள்ளையான்) கலந்து சிறப்பித்தார்.
அடுத்து அகவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை, தலைவர் பணிக்குழு அறிமுகம், கட்சிக்காக பணி செய்தவர்களுக்கான நியமனம் (சான்றிதழ்) வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும், நிகழ்வில் கொள்கைப்பிரகடனத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல்துறை செயலாளர் மா.இராஜேந்திரன் (சின்னா மாஸ்டர்) மேற்கொண்டதுடன், கொள்கை அறிக்கை வெளியீட்டையும் மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜிவரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.