கேரளா வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 350க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இன்னும் 206 பேர் மிஸ்ஸாகி உள்ளனர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய பெருந்துயரம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளா வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 350க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இன்னும் 206 பேர் மிஸ்ஸாகி உள்ளனர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய பெருந்துயரம் நடந்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டன. வீடுகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
அதேபோல் பொதுமக்களும் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர். பலரும் சாலியாறு ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மொத்தம் 1000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 700க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மாறாக நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 357யை கடந்துள்ளது. மேலும் 206 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று 6வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. தடம் தெரியாமல் அழிந்து போன கிராமங்களில் அடிக்கடி மாறும் காலநிலை மாற்றத்தால் மீட்பு பணி என்பது ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று 5வது நாளாக மீட்பு பணி என்பது நடந்தது. அப்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் ஒரு குழுவினர் முண்டக்கை பகுதியில் ஓடும் சாலியாறு ஆற்றில் தீவிரமாக தேடுதல் பணியை தொடங்கினர். சாலியாறு ஆற்றில் இருந்து தான் இதுவரை 170க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் முண்டக்கை கிராமத்தை கடந்து ஓடும் அந்த ஆற்றில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுவாக பிரிந்து தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று ராணுவத்தின் ஒரு குழுவினர் சாலியாறு ஆற்றில் சிறிய அளவிலான அருவி போன்ற பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ராணுவ வீரர்கள் அருவியின் மேற்பகுதியில் ஏறி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. காட்டாற்று வெள்ளம் காரணமாக ஆற்றின் தண்ணீர் சட்டென அதிகரித்தது. இதை கவனித்த ராணுவ வீரர்களில் ஒருபகுதியினர் உடனடியாக கரைக்கு திரும்பினர். ஆனால் சில ராணுவ வீரர்கள் ஆற்றின் நடுவே சிக்கி கொண்டனர். வெள்ளம் அதிகரித்த நிலையில் அவர்கள் ஆற்றின் நடுவே உள்ள பாறையில் ஏறி நின்றனர்.
ஆற்றில் தண்ணீர் குறையும் என்று அவர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் அளவு என்பது குறையவில்லை. மேலும் தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்தது. இதையடுத்து ராணுவம் சார்பில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கயிறு மூலம் ராணுவ வீரர்களை மீட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.