அரசியலுக்கு அப்பால் நமது சமூகம் தத்தமது பிரதேசங்களுக்கு எம்.பி. எடுக்க சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிக ஆரோக்கியமானது.
நாட்டில் ஏற்படுத்தப்பட்ட 'சிஸ்டம் சேன்ஜ்' இப்போது ஒவ்வொரு ஊர்களிலும் ஏற்பட வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். இதிலும் தவறில்லை.
இருந்தாலும், பாராளுமன்றத்திலுள்ள அத்தனையும் குப்பை என அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு புது முகங்களை அனைவரும் உள்ளமர்த்தினால் பிற்காலங்களில் பல சிக்கல்களை ஒவ்வொரு சமூகங்களும்; சந்திக்க வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன.
பல வருட அழுக்குகள், கறைகள் தூசு தட்டப்பட இப்போது காலம் கணிந்திருக்கின்றன. இருந்தாலும் கடந்த கால நிகழ்வுகளின் படிப்பினைகளிலிருந்து நாம் அனைவரும் எதிர்கால இருப்புக்களை நிதர்சனமாக சிந்திப்பதற்கான முறையான நாட்களே இவை!
'சோடா கேஸ்' நிலைமை இந்த பாராளுமன்ற தேர்தல் பிரதிநிதிகள் தெரிவில் ஏற்படுத்தப்படுமானால் எதிர்காலங்களில் கடுமையாக கவலைப்பட வேண்டிய நிலைமையும் உருவாகலாம். அதேவேளை மாறாக மிகவும் சந்தோசமடைய வேண்டிய நிலையும் வரலாம்.
அனைவரும் மனிதர்கள்தான் யாரையும் நாம் சொர்க்கத்திலிருந்து பெறவில்லை. சந்தர்ப்பம்தான் ஒரு மனிதனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் சித்தரிக்கின்றது.
கடந்த 5 வருடங்களுக்கு முன்னரும் சம்மாந்துறை மக்கள் மன்சூர் எம்.பி.யின் மேல் இருந்த ஒவ்வா நிலைமை காரணமாக, அ.இ.ம.கா வில் போட்டியிட்ட இஸ்மாயில் எம்.பி. க்கு சுமார் 13,100 வாக்குகளை அள்ளிக் கொட்டினர். அவ்வளவு வாக்குகளை கொட்டியும் எம்.பி. எடுக்கவில்லை.
அதே தேர்தலில் முன்னாள் எம்.பி. மன்சூர் குறைவான வாக்குகளை சம்மாந்துறையில் பெற்றதோடு மாவட்ட ரீதியான வாக்குகளால் எம்.பி. ஆகினார்.
இவர்களால் நடந்த நல்லது, கெட்டவைகளை பிறகு பார்ப்போம். இப்போது நம்ம ஊரு 'ட்ரெண்டில்' உள்ள சுயேட்சை சம்பந்தமாக பார்க்கலாம்.
'சம்மாந்துறையில் சுயேட்சை', 'ஊருக்கு எம்.பி.' இந்தக் கருத்து இன்று வைரலாக பரவ ஆரம்பித்திருக்கின்றது. உண்மையில் கிட்டத்தட்ட 51,283 வாக்குகளைக் கொண்ட சம்மாந்துறைத் தொகுதியில் எம்.பி. எடுக்க முடியும் என்பது பலராலும் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான்.
இருப்பினும் இதிலுள்ள பல எதிர்கால சிக்கல்களை நாம் நோட்டமிட வேண்டும். துறையூரின் மைந்தன் எனும் வகையிலும், இவ்வூரின் மேல் கொண்ட பற்று காரணமாகவும், ஊரின் வளர்ச்சியில் உள்ளத்தால் ஏற்பட்ட கவலைகளின் நிமித்தம் இது விடயமாக பல புத்திஜீவிகள், முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகள், சிவில் அங்கத்தவர்கள், முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள் பலருடனும் ஒரு ஊடகவியலாளராக தகவல்கள் திரட்டினேன்.
அவைகளின் வெளிப்பாடக கிடைத்த தகல்வகளை தொட்டுச் செல்லலாம் என நினைக்கிறேன்.
கடந்த 2015 பொதுத் தேர்தலில் அ.இ.ம.க. முழு திகாமடுல்ல மாவட்டத்திலும் பெற்ற மொத்த வாக்குகள் சுமார் 33,000
அந்தத் தேர்தலில் அ.இ.ம.க. ஆசனம் பெறவில்லை. 2015 இலேயே அந்த நிiயென்றால் திகாமடுல்லயின் தற்போது வாக்காளர் கணக்குப்படி விகிதாசாரம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை நுண் கணியத்தில் சிந்திக்க வேண்டும். இதனை முதலில் மனதில் வைத்துக் கொள்வோம்!
இப்போது விடயத்துக்குள் வருவோமானால்,
இறக்காமம், நாவிதன்வெளி, அக்கறைப்பற்றின் ஒரு பகுதி உள்ளடங்கலாக சம்மாந்துறைத் தொகுதியின் மொத்த வாக்கு சுமார் 99,727
இதில்,
நாவிதன்வெளி எல்லைக்குட்பட்ட வாக்குகள் - 17,217
இறக்காமம் எல்லைக்குட்பட்ட வாக்குகள் - 12,614
சம்மாந்துறைத் தொகுதியிலுள்ள அக்கறைப்பற்றின் ஒரு பகுதி - 18,613
இவை தவிர,
வீரமுனை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, கோரக்கர் கோவில் தமிழ் வாக்குகள் - சுமார் 6,704
இவற்றையெல்லாம் கழித்த பின்னர் தனியாக மஜீட்புர வாக்குகளையும் சேர்த்து சம்மாந்துறை வாக்குகள் மொத்தமாக சுமார் 44,579
இந் நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சம்மாந்துறையில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 72% ஆகும். அவ்வாறாயின் சுமார் 32,096 வாக்குகளே அளிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போது பௌதீக நிலைமையை கவனிப்போம்!
முழு ஊரும் கட்டுக்கோப்பாக ஒரு தலைவரின் சொல் கேட்கும் நிலையில் இப்போது ஊர் இருந்தால் இது 100 வீதம் சாத்தியம்.
மாறாக,
1. முன்னாள் அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்களின் தனிநபர் தேவைகளைப் பூர்த்தி செய்து நன்றிக் கடனுக்காக வாக்களிக்கூடியவர்கள் பலர் உள்ளனர்.
2. சம்மாந்துறை ஒன்றுபட்டு சுயேட்சையாம் என்றவுடன் அரசியல் கட்சிகளின் புரோக்கர்கள் வயிற்றை கலக்கிக் கொண்டு திரிகிறார்கள். இவர்கள் இவ்வளவு காலமும் செய்து வந்த புராதன தொழிலை ஊருக்காக விடுவார்களா?
3. பொதுவெளியிலும், பள்ளியிலும் பைஅத் செய்து விட்டு உள்ளால யாசீன் ஓதுபர்கள் நிறைவே உள்ளனர். (இது புளி ஊறின கறுப்பாடுகள். கண்டு பிடிக்கிற கடும் கஷ்டம்)
4. ஏற்கனவே கட்சிகளால் வலம் வந்த, வந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களின் பின்னால் ஒவ்வொரு கூட்டம் இருக்கிறது.
இப்படியாக 32,000 வாக்குகளும் துண்டாடப்படுவதற்கு பல கோணங்களில் வழிகளில் உள்ளன.
இவைகளை மறுதலித்து எண் கணித உயிரோட்டப்படி வெற்றிபெற்றால் சந்தோஷம். அவ்வாறு தவறும் பட்சத்தில் தோற்றால். பின்னர் பிரதேசவாத்தினால் இந்த ஊர் ஏனைய அனைத்து எம்.பிக்களாலும் ஒதுக்கி வைக்கப்படுமல்லவா?
அதுபோக இன்று சம்மாந்துறைக்கான எம்.பி. முஸ்லிம் வாக்குகளை மட்டும் வைத்தே பலராலும் கணிக்கப்படுகின்றது. இந்த ஊரில் வீரமுனை, கோரக்கர் கோவில், மல்வத்தை என மூன்று பிரதேச தமிழ் மக்களும்; உள்ளனர். அவர்களின் வாக்குகளையும் சேர்த்தால் மொத்தமாக சுமார் 6,704 என பார்த்தாலும் மொத்தமாக சம்மாந்துறையின் வாக்குகள் 51,283 வருகிறது.
ஆகையால், இங்குள்ள சுயேட்சை முனைப்பாளர்கள் அவர்களுடனும் பேசி ஏதேனும் ஒப்பந்தங்களுடன் பயணிப்பது இன்றைய கால சூழலுக்கு பெரிதும் உசிதமானது.
இந்த யதார்த்தங்கள் அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு.
சுயேட்சையாக ஊருக்காக ஒருவரை களிமிறக்கினால் வென்றிடாலம் எனக்கூறி குறிப்பிட்ட சிலர் மாத்திரம் கூடிக்கூடி 'குசு குசு' மந்திரம் ஓதாமல் அவற்றின் அளவு, நிர்ணயம், சாத்தியப்பாட்டிற்கான வழிமுறைகளை மக்களுக்கு வெளிப்படையாக கூற வேண்டும்.
ஊர் நிர்வாகத்தினரைத் தாண்டி, ஊரிலுள்ள புத்திஜீவிகள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வலர்கள், பண்பாடுள்ள இளைஞர்கள் இவ்வாறு பலருடனும் வெளிப்படையான கருத்தாடல்களை மேற்கொண்டு இவ்விடயம் சம்பந்தமான முடிவுக்கு வருவதே சிறந்தது.
அத்தோடு, இன்றுள்ள நவீன காலகட்டத்தின் பிரகாரம் குறித்த விடயதானத்தினை சமூக ஊடகமொன்றினூடாக நேரலையாக தைரியமாக மக்களிடம் முன்வைப்பதோடு, அவற்றிற்கு வருகின்ற பின்னூட்;டல்களையும் கருத்தில் எடுத்து நிதர்சமான தீர்மாணத்தின் மூலம் பயணிப்பதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன்.
(மண்ணிக்கவும், இந்தக் கட்டுரை நீளமானது. எனக்கு எந்த இங்குள்ள எந்த அரசியல்வாதியும் முக்கியமல்ல. பல படித்தவர்கள் ஊரில் உள்ளார்கள்; அவர்கள் முன் கணக்கு காட்டுவதற்கு நான் உயர் தரத்தில் கணிதப்பிரிவோ, வர்த்தப் பிரிவோ கற்றவனும் அல்ல. எனது அறிவுக்கு எட்டிய வகையில் 3 நாட்களாக சேர்த்த தகவல்களை வைத்து பெருமளவு ஊர்ஜிதப்படுத்திய பின்னர் வரைந்த கட்டுரை இது... கட்டுரையின் சுகாதாரமான பின்னூட்டல்களை வரைந்துள்ளேன்.)
'பிறந்த மண்ணின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்; நான் ஒரு இலங்கையன்'
நன்றி!
✍️ கியாஸ் ஏ. புஹாரி