Ads Area

காரைதீவில் தனது தாய்க்கு வேலை கோரி நின்ற சிறுமி ; வேலையற்ற பட்டதாரிகள் கறுப்புப் பட்டிப் போராட்டம்.

 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கறுப்புப்பட்டியணிந்து கவனயீர்ப்புப்போராட்டமொன்றினை இன்று (1) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த போராட்டமானது, அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன், கறுப்புப்பட்டியணிந்து, பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்புப் போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.


இதன் போது, இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையெனவும் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கூறிக்கொள்வோர் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.


இக்கவனயீர்ப்புப்போராட்டமானது, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன் தலைமையில் இடம்பெற்றதுடன், செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட் உட்பட குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் “அழிக்காதே அழிக்காதே, எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்?” போன்ற பதாகைகளை தாங்கியவாறு  தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினைப் பெற்றுத்தருமாறு  கோரிக்கை விடுத்தனர்.


இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe