கட்டுரை - Sarhoon Mohideen
பொருளாதாரத்தை நான் சீரமைத்தேன்,
என்னால் மட்டும்தான் அது முடியும்,
மீண்டும் நான் வராவிட்டால் வரிசையில் நிற்க வேண்டி வரும்.
என்பதெல்லாம் ஐயா ரணில் மற்றும் அவருடன் நிற்கும் தரப்பின் இப்போதைய பிரச்சாரங்களின் சாரம்சம்.
பொருளாதார மீட்சி மக்களின் ஒத்துழைப்பின்றி சாத்தியமே இல்லை. அதனை வசதியாக ஒளித்து வைத்துவிட்டு, ஏதோ மந்திரக் கோல் மூலமாக தனியாக நின்று இலங்கையினை மீட்டது போல சோடிக்க முனைகின்றனர் இவர்கள்.
மக்களின் ஆதரவைப் பெறாத Unpopular Decision களை ரணில் எடுத்த போது, அதனைச் சகித்துக் கொண்டு வாழப் பழகியது ரணிலோ இன்று அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளோ அல்ல. சாதாரண குடிமக்களே, வருமானத்தில் எந்தவொரு அதிகரிப்புமின்றி வாழ்க்கைச் செலவு இமாலய உயரத்தை அடைந்த போதும், தனது செலவினைச் சுருக்கி வாழ்வினை சகித்துக் கொண்டு வாழப் பழகியது யார்?
வரிக்குறைப்பு, இரசாயன உரங்களுக்கு தடை விதித்தது, இனங்களிடையேயான குரோதங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முனைந்தது போன்ற முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்து நாட்டினை படுகுழியில் தள்ளியதற்கு வகை கூறியதும், அதற்கான விளைவுகளை இன்று வரை அனுபவிப்பதும் இலங்கை மக்களே. ஆனால், அந்த முடிவுகளின் பின்னால் அதற்கு ஆதரவளித்து, அதனைச் சரி கண்ட அதே கும்பல் இன்று – பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப ரணிலால் மட்டும்தான் முடியும் என்கின்றது. இன்றைய இந்த நிலைக்கு நாமும் ஒரு காரணம் எனும் குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், ரணிலை துதிபாடிக் கொண்டிருக்கின்றது.
இதெற்கெல்லாம் காரணம் - இதனை மக்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கைதான். அது மக்களின் மறதி மற்றும் அசிரத்தை தரும் தைரியம். அந்த தைரியம் தவிர வேறேதும் இருப்பதாக தெரியவில்லை.
பகிரங்கமாக ரணிலைப் பரிகாசம் செய்தவர்கள், மத்திய வங்கி கொள்ளையன் என்றவர்கள், அதனை மக்களிடம் ஜனரஞ்சகப்படுத்தியவர்கள், “அரசாங்கத்திற்கு ரணில் ஆலோசனை சொல்லுமளவிற்கு நாட்டு நிலமை இப்போது இல்லை” என்று அப்போது கூறியவர்கள் என அனைவரும் இன்று அவரை விட்டால் நாட்டினை மீட்க யாருமில்லை என்று மேடைகளில் பிரகடனம் செய்து வருகின்றனர் என்றால், இது நாட்டுக்காகவா? இல்லை, தனது சுயநலனுக்காகவே.
நாட்டினை மீட்க, மக்களின் ஒத்துழைப்பு எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் முறைமையில் உள்ள தவறுகளை களைய முனையும் ஒரு தலைவன். அதன் மூலமே, ஒரு நிரந்தரமான விடிவினை பெறலாம், மக்களின் சகிப்புத் தன்மையினை தனக்கும் தன்னைச் சார்ந்த கும்பலுக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதனை தனக்கு மட்டுமே உரிய வெற்றியாக காட்ட முனையும் 75 வருட கால சுதந்திர இலங்கையின் அதே குட்டையில் ஊறிய ஒரு மட்டையினால் அல்ல!
மாற்றத்திற்கான சந்தர்ப்பம் இது மட்டும்தான்! தவறவிடாமல் பற்றிக் கொள்வது இலங்கையர்களான நம் அனைவரதும் கடமை!