எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் சுகயீனமடைந்த நிலையில் காட்டு யானை ஒன்று எழுந்து நடக்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக உயிருக்குப் போராடி வருகின்றது.
இதனை உயிருடன் மீட்க வனஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தினர்.
இருந்த போதும், யானையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதுடன், தொடர்ச்சியாக நீர், உணவுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் சம்பத் (ஐ.பி) மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களான தினேஷ், தாஜிதீன் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதன் முழு நேரப்பணியில் கல்குடா டைவர்ஸ், அகீல் எமேர்ஜென்ஸி யுனிட் செயற்பாட்டாளர் முஹம்மது ஹலீம் இரவு, பகல் பாராது அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யானையின் உயிரை மீட்கத்தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.