Ads Area

அநுரவின் ஆட்சியை கற்பனை செய்யவே பயமாகவுள்ளது - ரிஷாட் பதியுதீன்.



ஊடகப்பிரிவு.


“தொப்பி அணிந்த ஒருவரை மௌலவியாகக் காண்பித்து முஸ்லிம்களை ஏமாற்றும் கபடத்தனங்களை அனுரகுமார திஸாநாயக்க கைவிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 


ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் நேற்று (03) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளுக்கு முன்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் தொடர்ந்து பேசுகையில்,


“சாப்பாட்டுப்பார்சல்களுக்கும் சில்லறைச் சலுகைகளுக்கும் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தினரிடம் எச்சரிக்கையாக இருங்கள். 


நாட்டின் பொருளாதாரத்தையும் இந்தக்கள்வர் கூட்டமே சூரைடியது. ராஜபக்‌ஷக்களிடமிருந்த இக்கூட்டம், இப்போது ரணிலின் பாதுகாப்பில் தஞ்சமடைந்துள்ளது. இராஜாங்க அமைச்சரொருவர் இவ்வளவு காலமும் எதையும் செய்யாமல், இப்போது தான் பொழுது விடிந்தது போல ஓடித்திரிகிறார்.


எதிர்க்கட்சித்தலைவராக இருந்து கொண்டு, சகல சமூகங்களையும் சமமாக நேசிக்கும் பண்பட்ட அரசியல்வாதி சஜித் பிரேமதாச. பாடசாலைகளுக்கு "ஸ்மார்ட்" வகுப்பறைகள், பஸ் வண்டிகளை வழங்குகிறார். அனுரகுமார திஸாநாயக்க கல்வி பயின்ற பாடசாலைக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன. 


சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு இன்னும் சொற்பகாலங்களே உள்ளன. பஸ் வண்டிகளில் மக்களைக் கொண்டு வந்து, மாயை காட்டும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயார். 


அரசியல் வாழ்வில் எதையுமே செய்யாத அனுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தால் எதையும் செய்யுமளவுக்கு அனுபவமிருக்காது. இவரது ஆட்சியைக் கற்பனை செய்யவே பயமாகவுள்ளது.


சீனாவிலுள்ள உர்குர் இனத்து முஸ்லிம்களுக்கு நடப்பது என்ன? பள்ளிவாசலுக்குச்செல்ல முடியாது. நோன்பு நோற்க முடியாது. புனித ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு அனுமதியில்லை. இந்த அபாயகரமான நிலை இங்கும் வேண்டுமா?


மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் வவுனியா. இங்கு மூவாயிரம் வீடுகளை அமைத்தோம். தொழிலாளர்களை நேசித்தோம். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவினோம். இவை, எவற்றையும் செய்யாமல், வாக்குக்கேட்க வந்துள்ள ஏஜெண்டுகளை விரட்டி விடுங்கள்.


அனுரகுமாரவுக்கு தொப்பி அணிந்த மௌலவி இருப்பதைப்போலவே, ரணில் விக்ரமசிங்கவுக்கு "கோட்" அணிந்த அலி சப்ரி இருக்கிறார்.  முஸ்லிம்களை ஏமாற்ற வந்த பேரினவாத ஏஜண்டுகளே இவர்கள். 


எனவே, இத்தருணத்தில் நிதானமாகச் செயற்பட வேண்டும்” எனக்குறிப்பிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe