சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை 01 பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
குறித்த தகவலுக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத்தின் ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை 01 பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் டி. தினேஸினால் குறித்த குளிர்பானம் கைப்பற்றப்பட்டு அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் குளிர்பானம் தொடர்பான அறிக்கையில் அனுமதிக்கப்படாத நிறமூட்டியினையும் ( Tartrazine - INS 102), அனுமதிக்கப்படாத பாதுகாக்கும் இரசாயனத்தையும் (Benzoic acid) கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் குளிர்பானத்தை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் அதனை உற்பத்தி செய்தவரையும் ஆஜர் படுத்திய போது இருவருக்கும் எதிராக ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.