சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (05) புதன்கிழமை தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, இன்று (06) வியாழக்கிழமை அம்பாறை தடவியல் பொலிஸ் அதிகாரிகள் பாலமுனை முள்ளிமலை காட்டு பிரதேசத்திற்கு வருகை தந்து தடவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை செய்தவர் இன்று (06) தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளவர் தங்கள் உறவினர் என அடையாளங்கண்டுள்ளனர்.
இம்மரணம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.