ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையை கொன்ற வழக்கில், இந்தியப் பெண் ஷாஷாதி கானுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் செய்ததாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையைக் கொன்ற வழக்கில், இந்தியப் பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார். டிசம்பர் மாதத்தில் அந்தக் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாகத் தெரிகிறது. இதில், குழந்தை உயிரிழந்த நிலையில், ஷாஷாதி கான் கொலை செய்துவிட்டதாகக் கூறி அபுதாபி காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், ஷாஷாதி கானுக்கு மரண தண்டனை வழங்கி கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
மரண தண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு வெளியுறவுத்துறையிடம் பல முறை மனு கொடுத்த ஷாஷாதி கானின் தந்தை, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மாதம் 15-ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாஷாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.