பாறுக் ஷிஹான்.
இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகொன்று இன்று (18) காலை கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய கடற்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த படகினை மீட்டு கடற்கரைப்பகுதிக்கு இழுத்து வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூழ்கிய படகு சுமார் 65 இலட்சம் பெறுமதியானதுடன், கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரைப்பகுதிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இன்று குறித்த கடற்பகுதியில் தொழில் செய்து வரும் மீனவர் ஒருவர் குறித்த படகு முழ்குவதை அவதானித்து ஏனையோருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்குச்சென்ற பொதுமக்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.
இப்படகு கல்முனை பகுதியைச்சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர, இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெற்று வருதுடன், படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இறங்கு துறையின்றி பாரிய சிரமங்களை மீனவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கடற்பரப்பில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதால் கடற்கரைப்பிரதேசம் காவு கொள்ளப்படுவதால் மீனவர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொனா துயரங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
கடற்கரைப் பிரசேத்திலுள்ள பயன் தரும் தென்னை மரங்கள் கடலரிப்பினால் தரையில் வீழ்ந்து காணப்படுவதுடன், அவற்றின் வேர்களும் தரைக்கு மேலாக வெளிவந்துமுள்ளது.
இதனால் தென்னந்தோட்டங்களைப் பராமரித்து வருவோர் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதுடன், மீனவர்கள் தாம் ஓய்வெடுப்பதற்கும் தமது தோணி, படகு, மீன்பிடி வலை என்பவற்றை திருத்துவதற்காகப் பயன்படுத்தும் இயற்கையான நிழலும் இல்லாமல் போயுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
கடற்கரைப்பிரதேச மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்தி வைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும் இல்லாமலிருப்பது தமக்கு பெரும் கவலையளிப்பதாகவும் இந்நிலை ஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகம் ஒரு காரணமாகும் என பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடலரிப்பைத் தடுப்பதற்கான தடுப்புக்கல் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறாக, தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரைப்பிரதேசம் காவு கொள்ளப்படுமேயானால் எதிர்காலத்தில் இப்பிரதேச கடற்கரை முழுமையாக இல்லாமல் போகலாம் என்ற அச்சம் இப்பிரதேச மக்களிடையே அதிகரித்துள்ளது.