பாறுக் ஷிஹான்.
கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (17) இரவு இடம்பெற்றது.
வழமை போன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயுதக்களஞ்சியத்திற்குப் பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பிஸ்டல் ரக துப்பாக்கியொன்றினை பெறச்சென்ற வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஆயுதக்களஞ்சியத்திற்குப் பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கைத்துப்பாக்கியை பரிசீலனை செய்வதற்காக மேசையில் வைத்த வேளை திடீரென கைத்துப்பாக்கி தவறி வெடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜெகத் வழிகாட்டுதலில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் 39 வயதுடைய நல்லதம்பி நித்தியானந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் வலது காலில் துப்பாக்கி ரவை துளைத்துச்சென்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.