சபை கைவசமானவுடன் அமல்படுத்தப்படப்போகும் இரு விடயங்கள்-மாம்பழம் உதுமான்கண்டு நாபீர் விளக்கம்.
அபு அலா.
சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு நன்மையான விடயங்களை முன்னெடுக்க பல திட்டங்களைத் திட்டமிட்டுள்ளோம். அதனை அமுல்படுத்துவதாக இருந்தால் சம்மாந்துறை பிரதேச சபை எங்கள் கைவசம் வர வேண்டும். அப்போது தான் எங்களின் திட்டங்களை அமுல்படுத்த முடியுமென்று அம்பாறை மாவட்ட மாம்பழச் சின்ன சுயேட்சைக்குழு ஒன்றின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீர் தெரிவித்தார்.
இது தொடர்பில் (22) ஊடகங்களுக்கு அவர் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்மாந்துறை பிரதேச சபை எங்கள் கைவசம் வந்தவுடன் உடனடியாக இரு விடயங்களை அமல்படுத்தவுள்ளோம்.
முதலாவது, சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் கலந்துரையாடி மாட்டிறைச்சி விலையை ஒரு கிலோ கிராம் 1600 ரூபாய்க்கு விற்கக்கூடியளவில் அதன் விலையைக் குறைக்கவுள்ளோம். இதில் மாட்டிறைச்சி உரிமையாளர்களுக்கு எவ்வித நஷ்டங்களும் ஏற்படாதவாறே இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
இரண்டாவதாக மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற பொருட்களின் விலைகளில் 10 சதவீதக்கழிவினை வழங்குவதற்கான விசேட திட்டமொன்றையும் அமல்படுத்தவுள்ளோம்.
இதற்கான முன்னெடுப்புகளை கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இத்திட்டத்தை அமல்படுத்துகின்ற போது அரசாங்கத்தின் ஆலோசனை மற்றும் அனுமதி போன்ற உதவிகளைப்பெற்று எமது சம்மாந்துறை பிரதேச மக்களுக்கான விடயங்களைச் செய்யவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.