Ads Area

வளையா மீனின் விலையை 300 ரூபாவாக்க தேர்தல் கேட்கவில்லை - கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்.

பாறுக் ஷிஹான்


தமிழ் மக்கள் என்றும் தமிழ்க்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். எமது தமிழினத்தின் உரிமை மற்றும் இருப்பை அழிக்கும் அபிவிருத்தி என்ற மாயை எமக்குத் தேவையில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் வேட்பாளரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .


அம்பாறை மாவட்டம்  காரைதீவு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் (22) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,  


எதிர்வரும்  உள்ளூராட்சித்தேர்தலில் தமிழரசுக்கட்சி வீட்டுச்சின்னத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது.அம்பாறை மாவட்டத்திலுள்ள 7 உள்ளூராட்சி மன்றங்களில் 6 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் எந்த இடத்திலும் நிராகரிக்கப்படவில்லை. சகல சபைகளிலும் எமது கட்சி ஆட்சியமைக்கும். சில சபைகளில் தமிழ்ப்பேசும் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கவிருக்கிறோம்.தேர்தல் வந்தால் அபிவிருத்தி என்று கூறி பணத்தின் பின்னால் அலையும் கொள்கையில்லாதவர் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊரையே காட்டிக்கொடுப்பார்கள். அவர்களுக்கு காரைதீவில் இடமில்லை. காரைதீவு படித்த, வீரம் செறிந்த மண். இங்கு தேர்தல் வியாபாரிகளுக்கு இடமில்லை. காரைதீவில் எமக்கு போதிய ஆசனம் கிடையாது விட்டால் எமது இருப்பு பாதிக்கப்படும். இதற்கு எந்த ஒரு தமிழ் மகனும் துணை போகமாட்டான்.


எனவே, தமிழ் மக்கள் அனைவரும் தாய்க்கட்சியாகிய தமிழரசுக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.எமது மக்களை ஏமாற்றும் கூட்டம் ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றது. நீங்கள் உதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கட்சியின் பின்னால் முக்கியமான பெரும் தலைகள் கூட்டம் கூட்டமாக மக்களின் மண்டையை கழுவி ஏமாற்றுகிறார்கள்.  கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 88 வாக்குகளை எமது தமிழ் மக்கள் அளிக்காவிட்டிருந்தால் எமக்கு ஆசனமே இல்லை. அந்த நிலைமை உள்ளாட்சி சபையிலே கடைசி வரைக்கும் வராது. இவர் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.அந்த வகையில், தமிழரசுகட்சி பணத்திற்காக எவர் பக்கமும் சாயவில்லை. தமிழினத்தின் விடிவுக்காக கொள்கை மாறாமல் திடமாக நிற்கின்றார்கள். 


உண்மையில் தமிழ் மக்களாகிய நாங்கள் எப்பயாவது ஒரு கணம் ஆலோசித்து பார்த்ததுண்டா? தேர்தல் முடிந்தால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் முடிந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றும், மாற்றுக் கட்சிக்கு துணை போகும் ஆதரவாளர்கள் பணத்தொகையை பெற்றுக்கொண்டு காலாகாலம் தொட்டு ஏமாற்றி வருகின்றார்கள். இதில் பல குற்றச்சாட்டுகள் தமிழரசுக்கட்சியின் மீது வைக்கின்றார்கள்.  எனவே, சிங்கள கட்சிகளுக்கு எந்த விதத்திலும் நம் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பதனை உள்ளூராட்சி சபையில் நாம் காட்ட வேண்டும். வடக்கு, கிழக்கில் அனைத்து தமிழ் சபைகளையும் தமிழரசுக் கட்சியே ஆட்சி அமைக்கும். இது நம்பிக்கையாகும்.காரைதீவு பிரதேச சபையில் தமிழ்ப்பேசும் மக்களின் ஆட்சி தான் நிலவும். 


இப்பிரதேசத்தில் அபிவிருத்தி என்பது அறவே இல்லை. மக்களை பயமுறுத்துவதற்கும் விவசாயத்தை தொடர்ச்சியாக அச்சுறுத்துவதற்கும் யானை தற்போது காட்டுக்குள்ளிருந்து நாட்டிற்குள் வந்து விட்டது.தற்போது கூட கோமாரி என்ற பகுதியில் ஒருவரை யானை அடித்துக் கொன்றுள்ளது என ஒரு செய்தி கிடைத்திருக்கின்றது.இதனால் மக்களுக்கு அரசாங்கத்தினால் பாதுகாப்புக் கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வளையா மீனுக்கு 300 ரூபா ஆக்குவேன் என தேர்தல் கேட்கவில்லை. 


நெல் ஒரு மூடை 6 ஆயிரம் ரூபா என்று மாற்றுவேன் எனத்தேர்தல் கேட்கவில்லை.ஏனெனில், விவசாயிகளும் மக்களும் வாழ வேண்டும். இதனை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அபிவிருத்தி சார்ந்து ஆட்சி அமைக்க களமிறங்கி இருக்கின்றேன். என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe