Ads Area

சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை-அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோரப் பிரதேச பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழ வகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.


குறிப்பாக, சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி,  கல்முனை-அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.


இன்று சித்திரை புத்தாண்டு தினத்திலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினைக் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


இம்மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற  வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல்  ஊஷ்ணத்தைத்தவிர்ப்பதற்காக இவ்வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளைச் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.


இவ்வாறு வெளியிடங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பழ வகைகளின் தரங்களைப் பரிசோதிப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன்  ஆலோசனைக்கமைய சுகாதாரப் பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இது தவிர, தற்போது அதிக வெப்பம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், 250 ரூபாய் முதல் சுமார் 850 ரூபாய் வரை இவ்வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


இப்பழ வகையானது, பெரும்பாலும் வெப்பமான  காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச்செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.


இதே வேளை, அம்பாறை மாவட்டத்தில் உடல் உஸ்ணத்தைப்போக்கும் விதமாக பொதுமக்கள் வர்த்தக பழம், இளநீர், தோடை, திராட்சை வகைகள், வாழைப்பழங்கள், குளிர்பானம் செய்யும் விற்பனை நிலையங்களை அதிகமாக நாடிச் செல்வதனையும் காண முடிகின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe