சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சற்றுமுன் வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் A-1 விமானத்திற்கு சவுதி ராயல் விமானப்படை வான்வழி வரவேற்பு அளித்தது. பிரதமரின் விமானத்தை அழைத்துச் செல்ல ராயல் சவுதி விமானப்படை விமானங்கள் சுற்றிலும் பறந்தன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சவுதி ராயல் விமானப்படை விமானம் மோடியின் விமானத்தை அழைத்துச் செல்லும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ஜித்தா விமான நிலையத்தில் வந்திறங்கியதும் சவுதி அரேபியாவின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜித்தா வந்தடைந்தார். அவர் சவுதி பிரதமரும் மற்றும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானை சந்திக்கவுள்ளார். பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இந்தியா-சவுதி உத்தி கவுன்சில் கூட்டம் மற்றும் இந்திய சமூகத்தினருடனான சந்திப்பு ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான முக்கியமான ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அறிவிப்புகளும் இந்த சுற்றுப்பயணத்தின் போது வெளியிடப்படும் என்று தெரிகிறது.