Ads Area

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்கள் இடைநீக்கம்.

 பாறுக் ஷிஹான்.


முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தைச்சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொறியியல்பீடத்தைச் சேர்ந்த இரண்டாமாண்டு மாணவர்கள் குழுவொன்று  முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதே வேளை, இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்குட்படுவது போன்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.


கடந்த வாரம் அதிகாலை 2 மணியளவில் குறித்த மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.


தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களுள் ஒருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளார்.


இது போன்று பல தடவைகள் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் பல்கலையின் மேலிடத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். அண்மையில், சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதைக்குள்ளான மாணவரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.


இது குறித்து பகிடிவதைக்குள்ளான மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு  முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்விடயம் தொடர்பில் புதிய துணைவேந்தராகப் பதவியேற்ற பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைதீனைத் தொடர்பு கொண்ட போதிலும் அவர் பதிலளிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe