பாறுக் ஷிஹான்.
நீண்டகாலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (24) மாலை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், பெண் சந்தேக நபர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையின் போது விசேட அதிரடிப் படையினருடன் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொலிஸாரும் இணைந்து குறித்த இளம் பெண் உட்பட மூவரைக்கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
கைதான 27, 32 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கைதான சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.