Ads Area

இந்திய விமான விபத்து; இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு.

அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி இலண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


விபத்தை தொடர்ந்து, அருகில் இருந்த ராஜு படேல் (56) என்ற கட்டுமான தொழிலதிபர் 5 நிமிடங்களில் தனது குழுவினருடன் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து ராஜு படேல் கூறும்போது, “விபத்துப் பகுதியில் அனல் கடுமையான இருந்ததால் முதல் 15 – 20 நிமிடங்கள் எங்களால் நெருங்க முடியவில்லை. தீயணைப்பு படையின் முதல் குழு மற்றும் அம்பியூலன்ஸ்கள் வந்தவுடந்தவுடன் நாங்கள் மீட்புப் பணியில் இறங்கினோம். தொடக்கத்தில் ஸ்ட்ரெச்சர்கள் இல்லாதால் காயம் அடைந்தவர்களை மீட்க, புடவைகள் மற்றும் பெட்ஷீட்களை பயன்படுத்தினோம்” என்றார்.


படேல் குழுவினரை இரவு 9.00 மணி வரை சம்பவ இடத்தில் இருக்க அதிகாரிகள் அனுமதித்தனர். இதற்கிடையில் அவசர சேவைகள் பிரிவு அப்பகுதியை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்ட பிறகு படேல் குழு அடுத்த காரியத்தை நோக்கித் திரும்பியது.


பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர். இதில் 800 கிராமுக்கும் மேற்பட்ட (100 பவுன்) தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம், பாஸ்போர்ட்கள், பகவத்கீதை புத்தகம் ஆகியவற்றை மீட்டனர். இவை அனைத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


மீட்கப்பட்ட அனைத்து உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நெருங்கிய உறவினர்களிடம் விரைவில் திருப்பித் தரப்படும் என்றும் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.


அகமதாபாத்தில் கடந்த 2008இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட பல்வேறு பேரிடர்களில் ராஜு படேல் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe