நியூயார்க்,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.
நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை என பதிவிட்டார். தொடர்ந்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு நேற்று காலை டிரம்ப் உரையாற்றினார். அதில், ஈரானில் வெற்றியுடன் நடத்தி முடித்த ராணுவ தாக்குதலை பற்றி பேசினார். அப்போது அவருடன், துணை ஜனாதிபதி வான்ஸ், அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்க் ரூபியோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவர் பேசும்போது, பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளது. இந்த நிலை தொடர கூடாது. அதற்கு பதிலாக அமைதி நிலவ வேண்டும்.
ஈரானில் உள்ள அணு உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அவை தகர்க்கப்பட்டு உள்ளன. ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம். அவர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம் என பேசினார்.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது என அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பீட் ஹெக்சேத்தும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனிய கொடிகளை அசைத்தபடி கோஷம் போட்டனர். ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்தவும், ஈரானை தொடாதே, டிரம்ப் ஒரு போர் குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை சுமந்தபடியும் சென்றனர்.
ஈரானுடன் மோதலை தொடங்கிய மற்றும் காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவற்றை சுட்டி காட்டி இஸ்ரேலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், பாதுகாப்புக்காக போலீசார் பல இடங்களில் குவிக்கப்பட்டனர்.