சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய *உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஸ்கர்* அவர்களது இடமாற்றத்தை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று புதன்கிழமை (18) சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அவரது சேவைக்காலத்தில் பொது மக்களிடையிலும், பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது. இதனால் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாரிய கொள்ளைச் சம்பவம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என்பன இடம் பெறாமல் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் கருத்து தெரிவிக்கையில் "நான் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக வருவதற்கு முன்பே சதீஸ்கர் இங்கு கடமையாற்றினார்.
அவரின் மூலமாக சம்மாந்துறை பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், தங்க நகைகள், போதைப் பொருட்கள், பல்வேறு சம்பவங்களின் போது எனக்கு பக்க பலமாக இருந்து எனக்கு உதவியும்,ஒத்தாசையும் வழங்கி இருந்தார் ஆனால் இன்று அவருடைய இடமாற்றம் என்பது மிகுந்த கவலை அளிக்கிறது " என தெரிவித்தார்.
இதன் போது பிரியாவிடை பெற்றுச் செல்லும் உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர் கருத்து தெரிவிக்கையில்" சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எனது பயிற்சியின் அடிப்படையில் நூறு வீதத்திற்கு (100%) எழுவது வீதமான (70%) பல பெருங்குற்றப்பிரிவு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி வைத்து உள்ளேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இதற்கு சம்மாந்துறை பொதுமக்கள் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியாக இருந்தனர். இவ்வாறு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு, அவரின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இடமாற்றம் பொலிஸ் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.