நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு 94 வயதான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் முயற்சிகள் முக்கிய காரணம். மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பும் முக்கிய பங்கு வகித்தது.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்குச் சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார். நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார்.
2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார். இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டது. கேரளா வந்தபோது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவைக் காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட்டைத் தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நிமிஷாவின் குடும்பத்தினர் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.
இந்த சூழலில் தான் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தாகி இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் நீண்டகாலப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் 94 வயதான மதகுரு இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார். அவரின் முயற்சியாலேயே மரண தண்டனை நிறுத்தப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. மரண தண்டனை நிறுத்தி வைப்பில் அரசாங்கம் செய்ய முடியாததை தனிப்பட்ட நபராக அபுபக்கர் முஸ்லியார் எப்படி செய்தார்?, அப்படி என்ன செய்தார்?. இந்தக் கேள்விகளுக்கு விடையாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில். ஜூலை 13ல் நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் அரசு உறுதி செய்த பின்னர், இந்த கவுன்சில் கிராண்ட் முஃப்தி எனப்படும் கேரளாவின் மிகவும் மதிக்கப்படும், செல்வாக்கு மிக்க இஸ்லாமிய மதத் தலைவரான அபுபக்கர் முஸ்லியாரைச் சந்தித்து இதில் உதவக் கோரினர். அதன்பேரில் ஏமன் நாட்டில் சில செல்வாக்கு மிக்க ஷேக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் முஸ்லியார். பின்னர், இறந்தவரின் உறவினர்கள் உட்பட ஏமன் நாட்டின் செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதில் முதற்கட்டமாக மரணத் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. அப்படியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த 48 மணி நேரத்திற்கு முன்பு முஸ்லியாரின் தலையீடு காரணமாக தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.
யார் இந்த முஸ்லியார்? - அபுபக்கர் முஸ்லியார் சுருக்கமாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி. அதாவது, இஸ்லாமியத்தின் சட்ட நிபுணர் என்பதை இந்த கிராண்ட் முஃப்தி என்ற பட்டம் குறிக்கிறது. கிராண்ட் முஃப்தி என்பவர் இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான அதிகாரம் பெற்றவர். குறிப்பாக, சன்னி இஸ்லாமிய சமூகத்தில் கிராண்ட் முஃப்தி பட்டம் மிகவும் மதிக்கப்படுகிறது. ஆனால், இது மட்டும் தான் அவரின் அடையாளமா என்றால் இல்லை.
கேரளாவில் பிரபலமான சன்னி அமைப்பான 'சமஸ்தா கேரள ஜமியதுல் உலமா' என்ற அமைப்பில் இருந்து பிரிந்து ஜம்இய்யதுல் உலமா என்ற அமைப்பு மூலம் புதிய பாதையை தேர்ந்தெடுத்த முஸ்லியார், தீவிர சல்ஃபி இயக்கத்தை எதிர்த்தவர். வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளைப் பெற்று கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தினார். கல்விக்கான பங்களிப்புக்காக பரவலாக அறியப்படும் இவருக்கு சன்னி இஸ்லாமியர்கள் மிகத் தீவிரமாகப் பின்பற்றுகின்றனர். இதன்காரணமாக கேரளாவின் மலப்புரம் பகுதிகளில் செல்வாக்குமிக்க மதகுருவாகவும் வலம்வருகிறார்.
சி.பி.எம் கட்சியை ஆதரித்து வருவதால் முஸ்லியாரை 'அரிவாள் சன்னி' என்றும் அழைக்கிறார்கள். எனினும், பெண்கள் குறித்து பிற்போக்கு கருத்துக்களை தெரிவித்ததற்காக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். எனினும் மாற்று மதத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியாவின் உயிரை காப்பாற்றியதில் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்தார். நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பு மிக முக்கியம். அதை பெறுவது தான் முஸ்லியார் முன் இருந்த மிகப்பெரிய காரியம். அதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார்.
சாத்தியமானது எப்படி? - ஏமனின் மத நிறுவனம் 'தார் உல் முஸ்தபா'. கேரளா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து இங்கு மக்கள் கல்வி கற்று வருகின்றனர். இதனை நிறுவியவர் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ். இவர், பிரபல சூஃபி மதகுரு மட்டுமல்ல, போரில் ஈடுபடும் குழுக்கள் உட்பட, ஏமனில் செல்வாக்குமிக்க குடும்பங்கள் மற்றும் குழுக்களுடன் பெரிய தொடர்புகளை கொண்டவராகவும் அறியப்படுகிறார். இந்த ஹபீஸுடன் நீண்ட காலமாக நட்பு பாராட்டி வருகிறார் முஸ்லியார். ஒருமுறை முஸ்லியாரின் மகன் நிறுவிய அகாடமி திறப்பு விழாவில் இந்த ஹபீஸ் கேரளாவின் மலப்புரத்திற்கு வந்திருக்கிறார். இந்த நட்பை பயன்படுத்தி ஹபீஸ் மூலம் இறந்த மஹ்தி குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார் முஸ்லியார்.
முன்பே சொன்னதுபோல நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பு மிக முக்கியம். இஸ்லாத்தின் ஷரிய சட்டத்தில் ஒரு நபருக்கு 'ப்ளட் மணி' (Blood money) எனப்படும் ரத்தப் பணம் செலுத்துவதன் மூலம் மன்னிப்பு பெற முடியும் என்ற விதி உள்ளது. இஸ்லாம் நாடான ஏமன் நாட்டில் ஷரிய சட்டமே அமலில் உள்ளது. அந்த அடிப்படையில் இறந்த மஹ்தி குடும்பம் நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்கினால் மன்னிப்பிற்கு ஈடாக 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு வழங்கப்படும் என முதற்கட்ட பேச்சில் கூறப்பட்டது.
இந்நிலையில் நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதாக முஸ்லியார் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks - News18, Tamil Nadu