தில்சாத் பர்வீஸ்.
சமூக நலனுக்காக பங்களித்து வரும் ரீஷா சதகா அமைப்பினால், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான மூன்று சீலிங் பேன்கள் (Ceiling Fans) இன்று (16) புதன்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தற்காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாகவும், காற்றோட்டம் இன்மையாலும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக ரீஷா சதகா அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அமைப்பின் தலைவர் டாக்டர் ஐ.எல்.எம்.ரிஸ்வானின் தலைமையிலான குழுவினரினால் வைத்தியசாலையின் பெண் நோயாளர் விடுதியில் பயன்படுத்துவதற்காக மூன்று சீலிங் பேன்களை அன்பளிப்பு செய்தனர்.
இதன் போது, ரீஷா சதகா அமைப்பின் தலைவர் டாக்டர் ஐ.எல்.எம்.ரிஸ்வான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் "கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குடும்பங்களுக்கும் மற்றும் தனி நபர்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள், சுய தொழில் வாய்ப்புகள், மருத்துவ உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை இவ்வமைப்பு வழங்கி வருகிறது."
"மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், சிரமதான செயற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல் திட்டங்கள், தனிமனித பொருளாதார மேம்பாட்டு சார் திட்டங்கள்,தனிக்குடும்ப அடிப்படை வசதி நிர்மாணிப்பு செயற்பாடுகள் என 500 மேற்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்திலும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இது போன்ற பங்களிப்புகள் தொடரும்" என தெரிவித்தார்.
இதன் போது, வைத்தியசாலை நிர்வாகத்தினர் இவ்வமைப்பின் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன், ரீஷா சதகா அமைப்பின் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.