பணிப்பெண் கொலையில் குவைத்தி தம்பதிகளுக்கு குவைத் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்தது:
குவைத்தில் வீட்டு வேலைக்காரியை கொடூரமாக கொலை செய்ததற்காக குவைத் குடிமகனுக்கும் அவரது மனைவிக்கும் குற்றவியல் நீதிமன்றம் அண்மையில் (28/07/25) மரண தண்டனை விதித்துள்ளது. பணிப்பெண்ணை உடல் ரீதியாகத் தாக்கி கொலை செய்தல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், மருத்துவ உதவியை வழங்க மறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அவளை வேலை செய்ய கட்டாயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் இருவரின் மீதும் அரசு வழக்கறிஞர் சுமத்தியிருந்தார்.
முன்னதாக, பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டில், தம்பதியரை 21 நாட்கள் காவலில் வைக்க பொது வழக்கறிஞர் உத்தரவிட்டிருந்தார். பின்னர் இருவரும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, மரண தண்டனை கிடைக்க காரணமான முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம் இருவர் மீது சுமத்தப்பட்டு, அது ஆதாரங்களின் அடிபடையில் நிருபணம் ஆனதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில், குற்றவாளி இருவரும் பணிப்பெண்ணை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் அடித்ததாகவும், இறுதியில் அவளின் மரணத்திற்கு இந்த மனிதாபிமானமற்ற கொடூரமான தாக்குதல் வழிவகுத்ததாகவும் கூறி, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க அரசு தரப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.