நூருல் ஹுதா உமர்.
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க ஒன்றுகூடலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சினேகபூர்வ சந்திப்பும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமையில் சம்மாந்துறை தனியார் விடுதியில் நடைபெற்றது.
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பையேற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், இந்நிகழ்வில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் எம்.வை.அன்வர் சியாத், பொருளாளர் சாமிலா மன்சூர், உப தலைவர் எம்.நசீல் உட்பட சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்துக்குமிடையே நல்லுறவைப்பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய்ச்சங்கத்தின் தலைவரின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாக இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் உரைகளில் கருத்துரைகள் முன் வைக்கப்பட்டன.
அத்துடன், சம்மாந்துறை சட்டத்தரணிகளின் நலனோம்புகை விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் குறை, நிறைகளும் ஆராயப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச மக்கள் சிவில் வழக்குகளுக்காக கல்முனைக்குச்செல்லும் நிலை காணப்படுவதால் சம்மாந்துறை நீதிமன்றத்தை சிவில் நீதிமன்றமாக தரமுயர்த்துவது தொடர்பிலும், நீதிமன்றத்திலுள்ள சட்டத்தரணிகள் ஓய்வு அறையின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், தாய் சங்கத்தலைவரிடமிருந்து வாக்குறுதிகளும் பெறப்பட்டது.