பாறுக் ஷிஹான்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாட் மற்றும் உணவு மருந்து பரிசோதகர் ஜீவராஜா ஆகியோரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாட் முஸ்தபா, சிரேஷ்ட மேற்பார்வை பொதுச்சகாதாரப் பரிசோதகர் பைலான் நளீம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள இரவு நேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப்பொரி விற்பனை நிலையங்கள் கடந்த வியாழக்கிழமை (24) மாலை திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் நான்கு குழுக்களாக இணைந்து நடத்திய இச்சோதனையில் 39 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இப்பரிசோதனையின் போது, மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட, சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தூய்மையற்ற பாத்திரங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் போது, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஷீரும் கலந்து கொண்டார்.