ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பான விசேட கிழக்கு மாகாண செயலமர்வு (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து செயற்பாடுகளும் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டுவரும் நிலையில் கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனுடன் இணைந்ததாக, புதிய கணினி அடிப்படையிலான ஒன்லைன் முறைமை குறித்து பிரதேச செயலகங்களிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அந்த வகையில் இதுவரை ஒன்லைன் மூலமான விண்ணப்பங்களை மேற்கொண்டு சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலகங்களில் சம்மாந்துறை பிரதேச செயலகம் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். கணினி பொறிமுறை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ உதவி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முதல் அனுமதி அளித்தல் வரையிலான செயல்முறை மற்றும் அனுமதிக்குப் பிறகு மருத்துவ உதவியை செலுத்தும் செயல்முறை குறித்தும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மேலும், பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதோடு, கலந்துகொண்ட பணியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்கள் பங்கேற்றனர்.